அரசின் பின்நோக்கிய பாய்ச்சலை வெளிப்படுத்தும் நாணயச் சட்ட பதிலீடு சட்டமூலம் இரத்து - மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

அரசின் பின்நோக்கிய பாய்ச்சலை வெளிப்படுத்தும் நாணயச் சட்ட பதிலீடு சட்டமூலம் இரத்து - மங்கள சமரவீர

மங்கள சமரவீர மூன்று உத்தியோகபூர்வ ...
(நா.தனுஜா)

மத்திய வங்கி அரசியல் மயமாவதைத் தடுக்கும் நோக்கில் நாணயச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதா தற்போது முழுமையாகக் கைவிடப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் 'பின்நோக்கிய பெரும் பாய்ச்சலின்' ஊடாகப் புறந்தள்ளப்பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம் இதுவென்றும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கடந்த ஆட்சியில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா கைவிடப்பட்டிருப்பது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

இலங்கை மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், 70 வருட காலம் பழமையான நாணயச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக என்னால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதா தற்போது முழுமையாகக் கைவிடப்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 'பின்நோக்கிய பெரும் பாய்ச்சல்' முயற்சியில் கைவிடப்பட்ட மற்றொரு மிக முக்கியமான சீர்திருத்தம் இதுவாகும். இது குறித்து அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என்று கடுந்தொனியில் பதிவிட்டிருக்கிறார்.

ஏற்கனவே நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் ஆற்றப்பட்ட கொள்கைப் பிரகடன உரை பெரும்பான்மைப் பார்வையை மையப்படுத்தியதாக அமைந்திருந்ததாகவும், இது எமது நாடு மிகப்பெரும் பின்நோக்கிய பாய்ச்சலொன்றுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற தனது அச்சத்தை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசின் பின்நோக்கிய பாய்ச்சலை ...

No comments:

Post a Comment