மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை விலகச் சொல்லி அந்த இடத்துக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டவரை மாற்ற முனைவது அபத்தமானது. அச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் பவதாரணி இராஜசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பாராளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் மக்களின் அன்பை பெற்ற நம்பிக்கையை பெற்றவர்களே பாராளுமன்றம் செல்ல வேண்டும். இதனடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை விலகச் சொல்லி அந்த இடத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மாற்றமுனைவது அபத்தமானது.
இது பெரும் சவாலான விடயம். ஒரு பெண்ணை முன்னிறுத்தி வாக்குகளை சுவீகரித்து அவளை புறந்தள்ளி அவளது இடத்தில் வேறொருவர் வர நினைப்பது சமூக மட்டத்தில் நடக்கும் அநீதியே. இந்த தவறு நிகழ அனுமதித்தால் எங்கேனும் ஒரு இடத்தில் இதன் தொடர் நிகழ்ந்து கொண்டே இருக்க அனுமதித்தவர்களாகிவிடுவோம்.
கட்சி பேதங்களை கடந்து பெண்ணாக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். அவளுக்கு ஒரு அநீதி எழும்போது அதற்கு எதிராய் குரல் கொடுப்பேன் என உறுதியாய் முடிவெடுத்துள்ளோம்.
விழுது நடத்திய அவளுக்கு ஓரு வாக்கு நிகழ்வில் கலந்துகொண்ட நான் உட்பட உமா சந்திரபிரகாஷ், மீரா அருள்நேசன், ஞானகுனேஸ்வரி, அனந்தி சசிதரன், அனைவரும் எடுத்துக் கொண்ட உறுதி மொழி பெண்களுக்கெதிரான அநீதிக்கு குரல் கொடுப்பேன் என்பதாகும்.
சசிகலா ரவிராஜ் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அவருக்கு எதிராக அநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் அவருடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன். கட்சிகளை கடந்து பெண் வேட்பாளர்கள் இணைந்து பயணிக்க வேண்டும் என மற்றவர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment