ஆளுந்தரப்பின் ஆதரவுடன் அப்பட்டமான தேர்தல் சட்டமீறல்களில் யாழ்.வேட்பாளர் - சுமந்திரன் குற்றச்சாட்டு - News View

Breaking

Post Top Ad

Sunday, August 2, 2020

ஆளுந்தரப்பின் ஆதரவுடன் அப்பட்டமான தேர்தல் சட்டமீறல்களில் யாழ்.வேட்பாளர் - சுமந்திரன் குற்றச்சாட்டு

யாழ். ஆயருடன் சுமந்திரன் ஒருமணி நேர ...
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஆளும் தரப்பினரின் ஆதரவுடன் அப்பட்டமான தோதல் சட்டமீறல்களில் தேசிய கட்சியொன்றின் முதன்மை வேட்பாளர் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் சம்பந்தமாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளபோதும், அரச அதிகாரிகளின் கட்டுப்பாடுகளையும் தாண்டி செயற்பட்டு வருவதாகவும், தேர்தலின் பின்னர் உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக தென்னிலங்கை சிங்கள தேசிய கட்சியில் களமிறங்கியுள்ள முதன்மை வேட்பாளர் ஒருவர் ஆளும் தரப்பினரின் ஒத்துழைப்புடன் அப்பட்டமான தேர்தல் விதிமுறைகள் மீறலில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடத்திலும், யாழ்.தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அரசாங்க, தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள், கட்டுப்பாடுகளை தாண்டி தொடர்ச்சியாக தேர்தல் சட்ட மீறல்களை அவர் செய்து வருகின்றார்.

குறிப்பாக அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை ஏமாற்றி தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறுகின்றார். அந்த இளைஞர் யுவதிகளின் விபரங்களை பதிவுசெய்து விட்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கின்றீர்கள் என்பதை நாம் அவதானிப்போம். அதனை அடிப்படையாக வைத்தே உங்களுக்கான வேலை வாய்ப்பினை வழங்குவது தொடர்பாக சிந்திப்போம் என்றும் கூறுகின்றார்கள்.

இது ஜனநாயக வரைமுறைகளை மீறிய அச்சுறுத்தி வாக்குகளைப் பெறுவதற்கு எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். இவ்விதமான வேட்பாளர்கள் அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். மேலும் வாக்களிப்பு என்பது தனி மனித ஜனநாயக உரிமை. அவ்வாறு வாக்களிக்கப்படுகின்றபோது யாருக்கு வாக்களித்தார் என்று பார்க்க முடியாது. ஆகவே இளைஞர் யுவதிகள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும்.

மேலும் அரசியல்வாதி ஒருவர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெறுவதன் ஊடாக அனைத்து வேலை வாய்ப்புக்களையும் பெற்றுவிடலாம் என்றில்லை. அதற்குரிய சட்டரீதியான நிபந்தனைகள், போட்டி பரீட்சைகள், நேர்முகங்கள் என்றெல்லாம் இருக்கின்றன.

ஆகவே வெறுமனே இளைய சமுகத்தினரின் வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறான பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம். அத்துடன் இவ்வாறு தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்பில் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் நிறைவடைந்து, இத்தகையவர்கள் தெரிவுசெய்யப்பட்டாலும் உரிய சட்ட நடவடிக்கைகள் ஊடாக அவர்களின் உறுப்புரிமை பறிக்கப்பட்டு ஜனநாயக பண்பானவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad