சீன, இந்திய அரசியல் கொள்கையை இலங்கையில் ஸ்தாபிக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? - பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

சீன, இந்திய அரசியல் கொள்கையை இலங்கையில் ஸ்தாபிக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? - பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார்

Mahinda subconsciously expects Gota's defeat - UNP MP Marikkar ...
(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்று கூறிக் கொண்டு, சீனாவில் காணப்படும் அரசியல் கொள்கையை இங்கும் ஸ்தாபிக்க முயற்சிக்கின்றாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், அது தொடர்பில் விளக்கமளிக்குமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்று அரசாங்கம் தொடர்ந்தும் பேசுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் சீன அரசாங்கம் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கற்று வருவதாக தெரிவித்துள்ளார். அதனால், அங்குள்ள அரசியல் நடைமுறையை இங்கும் உருவாக்கும் எண்ணத்தில் அவர் இவ்வாறு தெரிவித்து வருகின்றாரோ ? என்று எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஒரே நாடு ஒரே சட்டம் மாத்திரமன்றி ஒரே கட்சியே ஆட்சியில் இருக்கின்றது. அதேபோன்று நரேந்திர மோடியின் செயற்பாடுகளும் அடிப்படைவாதமாகவே அமையப் பெற்றுள்ளது. அதனால் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும். 

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளதால் அவர்கள் கூறுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுத் தேர்தலில் 70 வீதமானவர்களே தங்களது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர். ஏனையோர் வாக்களிக்கவில்லை. 

அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளது. வாக்களிக்காதவர்கள் தங்களது வாக்கை பயன்படுத்தியிருந்தால் அது எதிர்க்கட்சிக்கே கிடைக்கப் பெற்றிருக்கும்.

இலங்கை என்பது ஏனைய நாடுகளை போல் இன்றி பல்லின மக்கள் வாழ்ந்து வரும் நாடாகும். இந்நிலையில் முஸ்லீம் விவாகச் சட்டம் தொடர்பிலே பலர் அவதானம் செலுத்தி வருகின்றனர். முஸ்லீம் மக்களை போன்று தமிழர் மற்றும் சிங்கள மக்களுக்கென்ற சட்டங்கள் இருக்கின்றன. அவை தொடர்பில் அரசாங்கம் எதாவது நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதா? என்பதை அறிவிக்க வேண்டும்.

இதேவேளை, எந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் நாட்டிலுள்ள மக்களின் கலாசார பண்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. இதனால் ஒரு நாடு ஒரே சட்டம் என்று கூறிக் கொண்டு நாட்டுக்குள் பொருத்தமற்ற செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது. எம்மை பொருத்தமட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறி ஒரே கட்சி என்ற கொள்கையையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் செயற்படுத்த முயற்சிக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment