இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர்

பெய்ரூட்டின் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடி விபத்து நடந்த சில வினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.

துறைமுகப் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை மீட்டு தனது கையில் பாதுகாப்பாக வைத்திருந்த பெண் செவிலியரின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெய்ரூட் விபத்து நடந்த சில நிமிடங்களில் உள்ளூர் புகைப்பட கலைஞரான பிலால் ஜாவிஸ் தனது கெமராவை எடுத்துக்கொண்டு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுப்பதற்காக அஷ்ரஃபிஹா மாவட்டத்திற்கு சென்றார். அங்கு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுத்துவிட்டு அம்மாவட்டத்தில் உள்ள அல் ரோவ்ம் மருத்துவமனைக்கு சென்றார்.

வெடி விபத்து காரணமாக அந்த மருத்துவமனையே நிலைகுலைந்திருந்தது. மருத்துவமனையின் 80 சதவிகித கட்டிடம் பெருத்த சேதமடைந்திருந்தது.

மருத்துவமனைக்குள் சென்ற பிலால் அங்கு ஒரு பெண் செவிலியர் தனது ஒரு கைகளில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுகையில் தொலைபேசியில் அவசர உதவிக்காக அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். 

வெடி விபத்து காரணமாக அந்த மருத்துவமனை கட்டிடம் இடிந்து 4 செவிலியர்கள், 12 நோயாளிகள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்திருந்தனர்.

வெடி விபத்தில் காயமடைந்த பலரும் இரத்த காயங்களுடன் அந்த செவிலியரை சுற்றியிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடலும் அந்த செவிலியரை சுற்றிக்கிடந்தது.

ஆனால், அந்த செவிலியர் தனது கையில் உள்ள குழந்தைகளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தோடும், மன உறுதியோடும் அருகில் உள்ள மருத்துவமனையை தொடர்புகொண்டு உதவி பெற முயற்சித்துக் கொண்டிருந்தார்.

இதைபார்த்த பிலால் ஒரு கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக் கொண்டு மறு கையில் தொலைபேசியை வைத்துக் கொண்டிருந்த அந்த செவிலியரை தனது கெமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

வெடி விபத்து சம்பவத்தால் மருத்துவமனை இடிந்து விழும் சமயத்திலும் குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட செவிலியரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த செவிலியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment