2,750 டன் அமோனியம் நைட்ரேட்தான் பேரழிவுக்கு காரணம் - லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிறிய சேதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

2,750 டன் அமோனியம் நைட்ரேட்தான் பேரழிவுக்கு காரணம் - லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிறிய சேதம்

விபத்து நடந்த துறைமுகம்
பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்தான் இந்த பேரழிவுக்கு காரணம் என லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது.

பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. 

இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். 4000 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால்தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பிரதமர் கூறுகையில்,’’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை’’ என்றார்.

அத்துடன், லெபனானின் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிறியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், தூதரக ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், லெபனானுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் லெபனானுக்கான இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளதோடு, வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்வில் தூதரகத்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயினும், இவ்வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment