
(எம்.ஆர்.எம்.வஸீம்)
வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரம் முதல் இறுதி வரை 143 தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தேர்தல் பெறுபேறுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றதாக அறிவிக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
அத்துடன் சமூகவலைத்தளங்கள் ஊடாக 510 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. மஹியங்கனை பிரதேசத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் கண்டி குண்டகசாலை பிரதேசத்தில் துப்பாக்கிகளை காட்டி வாக்காளர்களை அச்சுறுத்திய சம்பவமொன்றும் இடம்பெற்றிருப்பதாக எமக்கு முறைப்பாடு கிடைத்திருக்கின்றது.
அதேபோன்று வேட்பாளர்களின் இலக்கம் மற்றும் கட்சி சின்னங்களை அச்சிட்டு வாக்காளர்களுக்கு பகிர்ந்தளித்த சம்பவங்கள் பல்வேறு இடங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
மேலும் குருணாகல் நிக்கவரட்டிய பிரதேசம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாக்களிப்பு இறுதி நேரத்தில் பாரிய வாகன பேரணிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதேபோன்று 15 திருட்டுத்தனமான வாக்களிப்பு சம்வங்கள் பதிவாகி இருக்கின்றன.
இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றபோதும் தேர்தல் பெறுபேறுகளுக்கு பாதிப்பு இல்லாத தேர்தலாகவே எமது தேர்தல் கண்காணிப்பு மூலம் அறியக்கிடைத்தது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்திருக்கின்றது. வாக்களிப்பு நிலையங்கள் மிகவும் சுகாதார பாதுகாப்புமிக்கதாக அமைந்திருந்ததை எமது கண்காணிப்பு நடவடிக்கைகளின்போது உறுதி செய்யக்கூடியதாக இருந்தது. இதனை மேற்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார பிரிவினருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
பெப்ரல் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment