
(இராஜதுரை ஹஷான்)
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 71 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் நடத்துவதை சூன்யமாக்கும் எவ்வித பாரதூரமான சம்பவங்களும் எப்பிரதேசத்திலும் இடம்பெறவில்லை. ஜனநாயகமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார சேவையாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர், அரச நிர்வாகிகள், சிற்றூழியர்கள் உட்பட வாக்காளர்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 9 ஆவது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இடம்பெற்று இன்று முடிந்துள்ளது. ஜனநாயக ரீதியாகவும், சுமுகமான முறையிலும் தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ளமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற பாரிய தொரு வெற்றியாகும்.
பல சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியை அடைந்துள்ளோம். காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் தேர்தலில் வாக்களிக்கும் பணிகள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றன.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பலப்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 80 சதவீத வாக்குப்பதிவு இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் 71 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது என்பதும் மகிழ்வுக்குரியது.
வாக்குகள் எண்ணும் பணிகள் நாளை காலை 7 மணி தொடக்கம் 8 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்படும். பிரதான தேர்தல் முடிவுகளை நாளை நள்ளிரவுக்கு பிறகு வெளியிட எதிபார்த்துள்ளோம். எவ்வாறாயினும் 7 ஆம் திகதி காலை 6 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
விருப்பு வாக்குகளின் பெறுபேறுகள் 7 ஆம் திகதி அதாவது நள்ளிரவு முதல் வெளியிடப்படும். தேர்தல் பெறுபேறு விருப்பு வாக்கு பெறுபேறு ஆகியவற்றுக்கான வர்த்தமானி 8 ஆம் திகதி வெளியிடப்படும்.
தேசியப்பட்டியல் தொடர்பான வர்த்தமானி 9 ஆம் திகதி வெளியிடப்படும். தேர்தல்கள் தொடர்பான அனைத்து வர்த்தமானியும் 10 ஆம் திகதி வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment