காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பம் - இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பம் - இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு

ICC probing 3 Lankan players for match-fixing: Sri Lanka sports ...
கொவிட்-19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட 2019-20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான இலங்கையின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் தடைப்பட்டிருந்த பிரதான கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

போட்டித் தொடரின் அட்டவணையில் மேற்கொள்ளப்படவுள்ள ஒருசில மாற்றங்கள் தொடர்பில் விசேட பொதுச்சபை கூட்டமொன்றை நடத்தி அனைத்து கழகங்களினதும் அனுமதியைப் பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை கடந்த 10ஆம் திகதி அறிவித்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் சபையின் விசேட பொதுச்சபை கூட்டம் (30) இடம்பெற்றிருந்துடன், தடைப்பட்டிருந்த உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளை முக்கியமான இரண்டு மாற்றங்களுடன் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 

14 அணிகள் பங்குகொண்ட இம்முறை பருவகாலத்துக்கான முதல்தர கிரிக்கெட் தொடரானது Tier ஏ மற்றும் Tier பி என இரு குழுக்களாக நடைபெற்றன.

ஒவ்வொரு அணிகளும் லீக் சுற்றில் தலா 6 ஆட்டங்களில் விளையாடியிருந்தது. இதில் கொழும்பு கிரிக்கெட் கழகமும், சிலாபம் மேரியன்ஸ் கழகமும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டி முதலிடங்களைப் பெற்றுக் கொண்டதுடன், புள்ளிகள் பட்டியலில் கடைசி 6 இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் கேடயத்துக்கான பிரிவில் போட்டியிடும்.

முன்னதாக லீக் சுற்று ஆட்டங்கள் நான்கு நாட்கள் கொண்டதாக நடைபெற்றன. எனினும், கொவிட்-19 வைரஸ் நிலைமைய கருத்திற்கொண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளை மூன்று நாட்கள் கொண்டதாக நடத்துவதற்கு நேற்று நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் முன்னிலை பெறும் அணிகளை குறித்த பிரிவில் தரமுயர்த்துவதற்கோ அல்லது கடைசி இடத்தில் உள்ள அணிகளை கீழ் இறக்குவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த இரண்டு முக்கிய தீர்மானங்களும் 2019-20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இலங்கையின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், குறித்த காலப்பகுதியில் போட்டிகளை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் Tier பி பிரிவுக்காக விளையாடுகின்ற கழகங்களில் அதிகளவு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். எனினும், கொவிட்-19 வைரஸ் காரணமாக அனைத்து வீரர்களும் தங்களது நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இதனால் Tier பி பிரிவுக்கான போட்டிகளை மீண்டும் எப்போது ஆரம்பிப்பது குறித்து இந்தக் கூட்டத்தின் போது எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே அந்தப் பிரிவுக்கான போட்டிகள் அனைத்து இவ்வருடம் நடைபெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் உள்ளூர் முதல்தர கழங்களுக்கிடையில் நடைபெறுகின்ற தொடர்களை போட்டித்தன்மை கொண்டதாகவும், உயர்ந்த தரத்திலும் நடத்தும் நோக்கில் Tier ஏ பிரிவில் கீழ் போட்டியிடுகின்ற 14 அணிகள் எண்ணிக்கையை அடுத்த பருவத்திலிருந்து 12 அணிகளாக குறைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தினகரன்

No comments:

Post a Comment