தந்தையை நம்பியதைப் போன்று என்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், இருபதாயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பேன் - சஜித் பிரேமதாச - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

தந்தையை நம்பியதைப் போன்று என்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், இருபதாயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பேன் - சஜித் பிரேமதாச

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச ...
(செ.தேன்மொழி)

பிரேமதாசர்கள் சொல்வதையே செய்பவர்கள் என்பது நாட்டு மக்கள் அறிந்ததே என்று கூறியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தனது தந்தையை நம்பியது போன்று தம்மீதும் நம்பிக்கை கொள்ளுமாறு பெருந்தோட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்புதளை நகர சபையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்திடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை. 

வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் நாட்டு மக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை நாங்கள் வழங்குவதாக தெரிவித்தவுடன் என்ன செய்வது என்று அறியாது ஆளும் தரப்பினர் எம்மை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

எம்மீது சேறுபூசி வரும் மொட்டு கட்சியினருக்கும், அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கி வரும் நபர்களுக்கும் மற்றும் டீல் காரர்களுக்கும் நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 

நாங்கள் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்ததை போன்று எமது ஆட்சியில் அதனை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம். அதற்கான ஏற்பாடுகள் எம்மிடம் இருக்கின்றது. எமது கட்சியின் சிறந்த திறமைமிக்க குழுவினர் அதனை கண்டறிந்துள்ளனர்.

பாதிப்படைந்துள்ள மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது என்று தெரியாமல் இருக்கும் அரசாங்கத்திற்கு, நாங்கள் எடுத்திருக்கும் தீர்மானங்கள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மொட்டுவினரும், அவர்களுடன் டீல் செய்து கொண்டுள்ளவர்களும் செய்வதறியாது தடுமாறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரேமதாசர்கள் எப்போதுமே சொல்வதை செய்பவர்கள் என்பதை முழு நாட்டு மக்களுமே அறிந்து கொண்டுள்ளனர். இதேபோன்று பெருந்தோட்ட மக்களிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். 

எனது தந்தையான ரணசிங்க பிரமதாசவை நீங்கள் நம்பிச் செயற்பட்டதை போன்று என் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதாக நான் வாக்குறுதி வழங்கியது போன்று அதனை பெற்றுக் கொடுப்பதுடன், ஆட்சியமைத்து 24 மணித்தியாலத்திற்குள் எரிபொருள் விலையை குறைப்பேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad