தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட விதிமுறைகள் எதிர்த் தரப்பினர்களுக்கு மாத்திரமா ? - அஜித் பி பெரேரா - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட விதிமுறைகள் எதிர்த் தரப்பினர்களுக்கு மாத்திரமா ? - அஜித் பி பெரேரா

சஜித்தை வேட்பாளராக அறிவிக்ககோரி ...
(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் சட்ட விதிமுறைகள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டவையா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, ஆளுந்தரப்பினரின் பதாதைகளை பொலிஸாருக்கு அகற்ற முடியாவிட்டால் அதற்கான அனுமதியை எமக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், புதிதாகப் பிறந்ததைப் போன்று தேர்தல்கள் ஆணைக்குழு சில தேர்தல் சட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. வேட்பாளர்களது புகைப்படங்கள் விருப்பு இலக்கங்கள் பதிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. 

நாம் அதனை முறையாகப் பின்பற்றுகின்றோம். ஆனால் ஆளுந்தரப்பினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அருகில் அமைந்துள்ள அலுவலகத்தில் கூட கைப்படத்துடன் கூடிய பாதாதைகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.

அவ்வாறெனில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மாத்திரம்தான் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா ? இவ்வாறான நிலையில் எவ்வாறு நீதியான தேர்தலை நடத்த முடியும் ? ஆளுந்தரப்பினரின் பதாதைகளை பொலிசாருக்கு அகற்ற முடியாவிட்டால் நாம் அதனை அகற்றுவோம். ஆனால் அவ்வாறு செய்தால் சமாதானமான தேர்தலை நடத்த முடியாது.

எமக்கு தேர்தல் சட்டத்தை மீறுவதற்கும் அமைதியை சீர்குழைப்பதற்கும் விருப்பம் இல்லை. எனவே பொலிஸ்மா அதிபரும் தேர்தல்கள் ஆணையாளரும் இது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கோருகின்றோம்.


குருணாகலில் காணப்பட்ட வரலாற்று முக்கியத்துவமுடைய கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருணாகல் நகர சபைத் தலைவர் தவறை ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இவ்வாறானவர்களை பாதுகாக்கும் வகையிலேயே கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி 8 மாதங்கள் கடந்துள்ளன. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அரசாங்கத்தின் அசமந்த போக்கின் காரணமாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் உணவு விலையை அதிகரித்து மக்களை நெருக்கடிக்கு தள்ளிய ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமேயாகும். தற்போது அரச அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதி குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.

தேர்தலின் போதே இந்த நிலைமை என்றால் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டார்களானால் மக்களின் நிலைமை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். வாக்களிப்பின் போது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad