பொறுமையிழந்து எடுக்கப்படும் எந்த முடிவுகளாலும் நிதானமான சமூகத்தை உருவாக்க முடியாது - ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வடமேல் மாகாண ஆளுநர் முஸம்மில் - News View

Breaking

Post Top Ad

Friday, July 31, 2020

பொறுமையிழந்து எடுக்கப்படும் எந்த முடிவுகளாலும் நிதானமான சமூகத்தை உருவாக்க முடியாது - ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வடமேல் மாகாண ஆளுநர் முஸம்மில்

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் ...
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் பல படிப்பினைகளைக் கொண்ட ஒரு வணக்கமாகும். வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ஹஜ்ஜை நிறைவேற்றியிருத்தல் அவசியம். இறை தூதர் இப்றாஹீம் நபியின் அளப்பரிய தியாகங்களை நினைவு கூர்வதற்காகக் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜின் வணக்க வழிபாடுகளில், அர்த்தம் நிறைந்த பல வாழ்வியல் படிப்பினைகளும் உள்ளன. என வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிள்ளை வளர்ப்பு, தந்தை மற்றும் தனயன் உறவுகளிலுள்ள மரியாதை உணர்வுகள், அல்லாஹ்வுக்காக எதையுமே செய்யத் துணியும் தியாகங்களைத்தான் ஹஜ் வணக்கம் எமக்குப் போதிக்கிறது. உலகியல் ஆதாயங்களுக்காக எவற்றையெல்லாம் செய்யத் துணியும் இன்றைய காலங்களில், அல்லாஹ்வுக்காக மட்டும், அவனுடைய திருப்திக்காக மட்டும் தனது வாழ்நாளையும் அர்ப்பணித்து, மகனையும் அறுத்துப் பலியிடத் துணிந்த இறைதூதர் இப்றாஹீம் நபியின் சிந்தனைகள் என்றும் நினைவூட்டப்படும்.

அமைதியிழந்து தவிக்கும் இன்றைய உலகம் சமாதானக் காற்றைச் சுவாசிக்க, இறைதூதர் இப்றாஹீம் நபியின் பொறுமை, நிதானம், தியாகங்களைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அரசியலுக்காக மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் அற்பத்தனமான அரசியல் கலாசாரத்தை ஒழிப்பதில்தான், சமூகங்களிடையே நிதானத்தை ஏற்படுத்த முடியும். பொறுமையிழந்து எடுக்கப்படும் எந்த முடிவுகளாலும் நிதானமான சமூகத்தை உருவாக்க முடியாது. எமது நாட்டின் கடந்தகால வரலாறுகள், இவற்றையே இன்று உணர்த்தி நிற்கின்றன.

உலகையே சுருட்டிப் பெட்டிப்பாம்பாக முடக்கி வைத்துள்ள கொரோனா வைரஸின் கொடிய தாக்கத்தால், ஹஜ் கடமைக்காகச் செல்ல முடியாத சூழலில் நாம் வாழ்கிறோம். எனினும், ஹஜ்ஜின் தாற்பரியங்களை உணர்ந்து நாம் செயற்படுவது சிறந்தது.

ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு ஏனைய சகோதர மக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழுமாறும் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுகின்றேன்...

01-08-2020
ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad