
(செ.தேன்மொழி)
ஐக்கிய மக்கள் சக்தியினால் தனியாக ஆட்சியமைக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அந்த கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய தேசியக் கட்சி எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவர்களால் 5 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நிரந்தரமான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்களின் வாக்குகள், மிளகாய்த்தூள் குழுவினருக்கும், மதுபான விற்பனையாளர்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. அரச உத்தியோத்தர்களின் மேலதிக கொடுப்பனவு, விசேட கொடுப்பனவு என்பவற்றை நிறுத்தி வைத்துள்ள அரசாங்கத்திற்கு அரச ஊழியர்கள் வாக்களிக்கவும் போவதில்லை.
அந்நிய செலாவனியை பெற்றுக் கொடுத்தும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டுக்குள் வர முடியாமல் இருப்பவர்களின் வாக்குகளும் அரசாங்கத்திற்கு கிடைக்காது. மற்றும் அங்கவீனம் அடைந்த இராணுவ வீரர்களை அழைத்து வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்திவிட்டு, அவர்களது ஆட்சியில் 55 வயதுக்கு பின்னர் சம்பளத்தை பெற்றுக்கொடுக்காமல் இருக்கும் அரசாங்கத்திற்கு அவர்கள் வாக்களிக்க போவதில்லை.
இதேவேளை பொருட்களின் விலையும், ஒளடதங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமின்றி வயோதிபர்களின் சேமிப்பு பணத்திலும் கைவைத்துள்ள அரசாங்கத்திற்கு அதனால் பாதிப்படைந்துள்ள நபர்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். அதற்கமைய கோத்தாபயவின் வெற்றிக்கு ஆதரவளித்த 69 இலட்சம் பேரில் 30 வீதமானோரின் வாக்குகள் அரசாங்கத்திற்கு கிடைக்கப்போவதில்லை.
அந்த வாக்குகளில் 3 வீதமான வாக்குகள் வங்கி குழுவுக்கும், 7 வீதமான வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கிடைத்தாலும், எஞ்சியத் தொகை எமக்கே கிடைக்கப் பெறும். அப்போது நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்த்துக் கொள்ளமாலே ஆட்சியமைப்போம். மக்கள் எப்போதும் பழைய சிந்தனைகளையே கொண்டிருப்பவர்கள் அல்ல, அவர்கள் மாற்றமடைந்துள்ளன. இந்நிலையில் தவளைகளுக்கு எதிர்வரும் ஆறாம் திகதி தகுந்த பதில் கிடைக்கப்பெறும்.
இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள கட்டிடம் ஒன்றுக்கு எஞ்சியுள்ளவர்கள் எவ்வாறு உரிமை கோருவார்களோ, அந்த வகையில்தான் ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியுள்ள குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். ஊடக கண்காட்சிகளை நடத்திக் கொண்டு, தங்களது கட்சியிலிருந்து விலகியவர்களின் உறுப்புரிமையை நீக்குவதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேரந்த நகர பிதாக்கள் இருவருக்கு ஒழுக்காற்று விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள இவர்கள், தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்போது விசாரணையை நடத்த முடியவில்லை என்ற அறிவித்தலை விடுத்துள்ளனர். இது பெரும் நாடகமாகும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உடனே முடியும். ஏன் என்றால் அவர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கு எதிராக குற்றப்பிரேரனை கொண்டுவந்தபோது அவரை காப்பாற்றியதாக தெரிவித்திருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். அதற்கு காரணம் மறைந்த அரசியல் தலைவர்களான காமினி திசானாயக்கவையும், லலித் அத்துலத் முதலியையும் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ள நிலையில், பிரேமதாசவுக்கு பின்னர் தானே கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க முடியும் என்று தெரிந்து கொண்டமையினாலேயே. இந்நிலையில் இவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களால் நாடு பூராகவும் 5 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment