இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபத்தை இடித்தமை தவறு, மூடி மறைக்க பிரதமர் முயற்சி என்கிறார் மனோ கணேசன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபத்தை இடித்தமை தவறு, மூடி மறைக்க பிரதமர் முயற்சி என்கிறார் மனோ கணேசன்

சட்டமாதிபர் திணைக்களம், நிதி மோசடி ...
(செ.தேன்மொழி)

இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபத்தை இடித்தமை தவறான காரணமாகும். அதனை யார் செய்திருந்தாலும் அவர்கள் தங்களது தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பிலிருக்கும் தலைவரொருவர் தனது தரப்பினரின் தவறை மறைப்பதற்காக முயற்சிப்பது கவலையளிப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இறுதியான இராச்சியம் கண்டி இராச்சியமே. இதன்போது ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் என்ற மன்னனே ஆட்சி செய்திருந்தார். இவர் ஒரு இந்திய தமிழர். இலங்கையை ஆட்சி செய்வதற்கு மன்னரொருவன் இல்லை என்பதினால் சிங்கள மக்கள் இந்தியாவிற்கு சென்று அவரை அழைத்து வந்து ஆட்சியை ஒப்படைத்தார்கள் என்று வரலாற்று கதைகள் கூறுகின்றன. 

இந்நிலையில் ஆரம்ப காலங்களில் இலங்கைவாழ் மக்களிடையே இன, மத, மொழி பேதங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதற்கு இதுபோன்ற வரலாற்று கதைகள் சான்றுகளாக இருக்கின்றன.

தமிழ், முஸ்லீம் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது பல்லின மக்கள் வாழும் நாடாகும். இந்நிலையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எமது எண்ணம். 

2 ஆம் புவனேகபாகு மன்னின் அரச மண்டபத்தை உடைத்தமை தவறான காரியமாகும். இதனை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தங்களது தவறை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதேபோன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தங்களது தரப்பினர் யாராவது இந்த சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்களை பாதுகாக்காது செய்த தவறை ஒத்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் மதிப்பளிக்கின்றோம். எமது கலாசாரத்தை பாதுகாப்பதுடன், நாட்டிலுள்ள அனைத்து இனங்களின் கலாசாரத்திற்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். 

என்னை பொறுத்தமட்டில், நான் விகாரைக்குச் சென்றால் ஒரு பௌத்தனாகவும், கோயிலுக்குச் சென்றால் ஒரு இந்துவாகவும், பள்ளிவாசலுக்கு சென்றால் ஒரு முஸ்லீமாகவும், கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றால் ஒரு கிறிஸ்தவனாகவும் எண்ணியே செயற்படுவேன். இதனை தெரிவிப்பதில் எனக்கு பெருமையே என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad