நில்வளா கங்கையின் மாகல்லகொட நீர் பம்பும் பகுதிக்கு அருகில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (01), குறித்த நபருடன் மேலும் இருவர் அவ்விடத்தில் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஒருவரின் கையடக்கத் தொலைபேசி கங்கையினுள் தவறி வீழ்ந்துள்ளது.
அத்தொலைபேசியை எடுப்பதற்காக, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கங்கையில் இறங்கியுள்ளார். இதன் பின்னர் அவர், தன்னை ஒரு முதலை கடிப்பதாக கூச்சலிட்டுள்ளார்.
ஆனால், அவ்வேளையில் அவரைக் காப்பாற்றுவதற்கு எவராலும் முடியாமல் போயுள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை இன்று (02) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
54 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த ஒருவரே குறித்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
அவர் உடல்நலக் குறைவு காரணமாக, தனது சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் திஹகொட பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment