
ஐ.ஏ. காதிர் கான்
ஆளும் கட்சியில் எமது அரசியல் பங்கேற்பு, காலத்தின் முக்கிய தேவையாகும். ஆளும் கட்சியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற வேட்பாளர் ஒருவரை ஆளும் கட்சி சார்பாக வெற்றி பெறச் செய்வது, உடுநுவர தொகுதி வாழ் முஸ்லிம்களது தேசிய பொறுப்பாகும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸின் தலைமையில் உடுநுவர தொகுதி வாழ் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு திரண்டிருந்த மக்களிடம் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அரசாங்கம் சார்பில் களம் இறங்கியுள்ள ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரான ஏ.எல்.எம். பாரிஸின் வெற்றியை உறுதிப்படுத்தும் நிகழ்வு, (30) வியாழக்கிழமை உடுநுவர, எலமல்தெனிய, பியல் வைட் (pearl white pelace) மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமருக்கு உடுநுவர தொகுதி மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் உடுநுவர தொகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களம் இறங்கியுள்ளதால், அவருடைய வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து இன மக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் தொடர்ந்தும் கூறியதாவது, நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். இத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், நீங்கள் உங்களுடைய மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment