ஜனாதிபதி கோத்தபய தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கல்வி கொள்கை மாற்றியமைக்கப்படும் - விஜயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

ஜனாதிபதி கோத்தபய தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கல்வி கொள்கை மாற்றியமைக்கப்படும் - விஜயதாஸ ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் கல்வி கொள்கை முழுமையாக பலவீனமடைந்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கு மாத்திரம் விசேட வரப்பிரசாரங்கள் வழங்கி ஏனைய பாடசாலைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி எவ்வாறு கிடைக்கப் பெறும். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கல்வி கொள்கை மாற்றியமைக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், காலஞ்சென்ற சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா இலங்கை அரசாங்க சபையின் முதல் கல்வியமைச்சராக கருதப்பட்டார். இவர் வகுத்த கல்வி கொள்கை ஆரம்ப கட்டத்தில் சிறந்ததாக காணப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அரசியல்வாதிகள் கல்வி கொள்கையினை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் காரணமாக கல்வி கொள்கை முழுமையாக பலவீனமடைந்தள்ளது.

நாட்டின் கல்வித்துறை அனைத்து மட்டங்களிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பாடநெறிகள் தொழில் வாய்ப்புக்களை இலகுவில் பெற்றுக் கொள்ளும் விதமாக அமையவில்லை. மாறாக தேவையற்ற விடயங்களையே பாடநெறிகள் உட்படுத்தியுள்ளன. 

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியென்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் 354 தேசிய பாடசாலைகளுக்கு மாத்திரமே அரசாங்கத்தினால் சிறப்பு வரப்பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் எவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி என்பதை எதிர்பார்க்கமுடியும்.

நாட்டில் உள்ள 354 தேசிய பாடசாலைகளில் 10 பாடசாலைகளில் மாத்திரமே அதிபர்கள் கடமையில் உள்ளார்கள் ஏனைய 344 பாடசாலைகளில் பதில் அதிபர்களே சேவையில் ஈடுபடுகிறார்கள். 

2019ம் ஆண்டு அதிபர் நியமணத்துக்கான போட்டிப்பரீட்சை இடம்பெற்றன. இப்பரீட்சைக்கு 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்து 3881 பேர் சித்தியடைந்தார்கள். இவர்களிலும் 1858 பேருக்கு அரசியல்வாதிகளின் சிபாரிசின் ஊடாக சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு நியமணம் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அதிபர்கள் எவ்வாறு சுயாதீனமாக செயற்படுவார்கள்.

இலவச கல்விக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாக தனியார் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன தனியார் பாடசாலைகளை கண்காணிப்பதற்கு எவ்வித ஒழுங்கு முறையும் கிடையாது. வசதி படைத்தோர் பாடசாலைகளை ஆரம்பிக்கலாம் என்ற நிலை எழுந்துள்ளது. 

ஜனாதிபதி கோத்தபய ராஜாக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம் தோற்றம் பெறும். நவீன கற்கை நெறியினை உள்ளடக்கிய விதத்தில் கல்வி கொள்கை வகுக்கப்பட்டு தனியார் கல்வி முழுமையாக அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்.

No comments:

Post a Comment