வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை இளைஞர்கள் மடக்கிப்பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இன்று (24) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு வேளையில் வீடு புகுந்து தொலைபேசிகள், இலத்திரனியல் உபகரணங்கள் போன்றன திருடப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடும் மேற்கொள்ளப்படிருந்தன.
இந்நிலையில் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்றையதினம் வவுனியா நகரில் உள்ள தொலைபேசி விற்பனையகத்திற்கு சென்று களவாடிய தொலைபேசியினை மிகக் குறைந்த விலைக்கு விற்க முற்பட்ட சமயத்தில் குறித்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சந்தேகத்தில் குறித்த நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த பொருட்கள் நெடுங்கேணி பகுதியில் களவாடப்பட்ட பொருட்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரின் பயணப் பொதியினை சோதனையிட்ட போது அதனுள் களவாடப்பட்ட தொலைபேசிகள், இலத்திரனியல் உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றினர்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதினால் குறித்த நபரையும் களவாடப்பட்ட உபகரணங்களையும் வவுனியா பொலிஸார் நெடுங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த திருட்டு சம்பவத்துடன் இராஜகிரிய பகுதியினை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)
No comments:
Post a Comment