கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மீள கடத்தல் காரர்களுக்கு விற்பனை : ஆயுதங்களுடன் பாதுகாப்பு வழங்கிய அதிரடிப்படையினர் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மீள கடத்தல் காரர்களுக்கு விற்பனை : ஆயுதங்களுடன் பாதுகாப்பு வழங்கிய அதிரடிப்படையினர் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவர்

அம்பலமாகியது ! கைப்பற்றப்பட்ட ...
(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை கடத்தல் காரர்களுக்கே மீள விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஆதாரங்களுடன் பாதுகாப்பு பெற்றுக் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும், அவர்களையும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருப்பதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கொழும்பு பிராதான நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் தெரிவித்தார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை கடத்தல் காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது சந்தேக நபர்கள் அனைவரும் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அங்குணுகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

ராகம - பட்டுவத்த பகுதியைச் சேர்ந்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் விமலசேன லயனல், களுத்துறை - நாகொட பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் கயான் தரங்க பிரேமரத்ன சில்வா, மாலம்பே பகுதியைச் சேர்ந்த சார்ஜன் முத்துபண்டாகே சமிந்த லக்ஸ்மன் ஜயத்திலக்க, கேகாலை - ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்த சார்ஜன் ஜயசிங்ககே சமன் குமார ஜயசிங்க, பாதுக்க - கனேகொட பகுதியைச் சேர்ந்த சார்ஜன் வதுகாரகே விமல பிரசாத் வதுகார, பன்னிப்பிட்டி - மாக்கும்புர பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டேபிள் பட்டுவத்தகே ருவன் புஸ்பகுமார, பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ரத்துகமகே அஷங்க இந்திரஜித் ரத்துகமகே, திரப்பனை பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சமித் பிரதீப் குமார, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் வன்னியாராச்சிகே லக்ஷான் சமீர, கெடலாவ - கொகாவெல பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஹேரத் முதியன்சேலாகே லலித் ஜயவர்தன, கன்துன - வனதிவெல பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் தஹனக ராலளாகே அத்துல ஜயந்த பண்டார மற்றும் ஆட்டிகம பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க ஆராச்சிகே தினேஷ் நிர்மல ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

முறைப்பாட்டாளர்கள் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ், அரச சட்டவாதி நுவன் ஆட்டிகல, அரச சட்டவாதி கசுன் சரச்சந்திர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா, பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் திசாநாயக்க, பொலிஸ் பரிசோதகர் விஜே சூரிய, பொலிஸ் பரிசோதகர் உபாலி பண்டார ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் சட்டதரணி அஜித் பத்திரண, சட்டதரணி வசந்த பிட்டிகல, சட்டதரணி டம்மிக்க ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது பிரதி சொலிஸ்டர் ஜெனரால் திலீப் பீரிஸ் தெரிவித்ததாவது, பொலிஸ் பரிசோதகர் சமன் பொறுப்பிலிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் தொடர்பில் அரச இரசாயன பரிசோதகரினால் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த சந்தேக நபர்கள் பலபிட்டி பகுதியில் அமைந்துள்ள 'விலா' எனும் பாதுகாப்பு வீட்டில் தங்கியிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் கப்பலொன்றில் ஏற்றி வரப்பட்ட 243 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை இவர்கள் கடலில் இருந்து எடுத்து வந்தனர். இதன்போது 5 துப்பாக்கிகளையும் எடுத்து வந்துள்ளனர். அதில் ஒரு துப்பாக்கி காணாமல் போயுள்ளது. தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கெமிலஸ் பிள்ளை என்பவரே இந்த கடத்தல்களில் பின்னணியில் உள்ளார்.

இவர்கள் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு போதைப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியுள்ளனர். ஆழ்கடலில் இருந்த போதைப் பொருட்களை எடுப்பதற்காக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் படகில் சென்றுள்ளதுடன், அதன்போது படகை செலுத்திய நபருக்கு ஒரு கோடி ரூபா பணத்தை இந்த அதிகாரிகள் பெற்றுக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மீன் பிடித்து வருவதாக காண்பித்தே இந்த போதைப் பொருட்களை எடுத்து வந்துள்ளதுடன், மீன் கொள்வனவுக்கு 15 இலட்சம் ரூபாவும், எண்ணெய்க்கு 5 இலட்சம் ரூபா என்ற அடிப்படையிலே இந்த பணம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் செய்மதி வசதிகளைக் கொண்ட தொலைபேசியை பயன்படுத்தியுள்ளார்கள், இதற்கான கட்டணத்தை செலுத்துவது எவ்வாறு?, இதற்கான கட்டணத்தை சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளிலேயே செலுத்த வேண்டும். 

இவ்வளவு தொகை பணம் எவ்வாறு பொலிஸாருக்கு கிடைக்கப்பெறும், இந்தளவு பணம் அவர்களுக்கு கிடைப்பதற்கு வசதியில்லை. இந்நிலையில் வீரசிங்கம் என்ற உத்தியோகஸ்தரிடமிருந்து 320 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையில் 11 பக்கற்றுகளை முதல் சந்தேக நபர் பொதி செய்துள்ளார்.

90 சதவீதத்திலான சர்வதேச தருவிப்பாளர்களுக்கு தூய்மையான ஹெரோயின் வழங்கப்படுகின்றது. அதனை இவர்கள் கலப்படம் செய்து பொதி செய்கின்றனர். ஒரு கிராம் ஹெரோயின் விலை 12 ஆயிரம் ரூபாவாகும்.

இந்த குழுவினர் பிரதி பொலிஸ் மா அதிபரினால் தெரிவு செய்யப்பட்ட குழுவினராவர். இவர்கள் நேரடியாகவே பிரதி பொலிஸ் மா அதிபரிடமே தங்களது செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பார்கள்.

இதுவரையில் 115 மில்லியன் ரூபாவை சொத்துகளாக சேமித்துள்ளனர். அடிப்படையான 33 மில்லியன் பெறுமதியான சொத்தும், 43 வங்கி கணக்குகள், 20 பவுன் தங்க நகைகள் போன்ற சொத்துக்களை சேமித்து வைத்துள்ளனர். இவர்களுடன் நெருங்கி செயற்படும் பொலிஸ் விசேட அதிரடிப்டையினர். இதற்கு ஆயுதங்களுடன் பாதுகாப்பு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது, இது தொடர்பில் விரையில் அறியப்படுத்துவேன்.

ரத்நாயக்க என்ற அதிகாரியின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த 300 இலட்சம் தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று வருட காலத்தில் சேகரிக்க முடியாத அளவுக்கு பணத்தை சேமித்து கொண்டுள்ளனர்.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முறைபாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட மேலதிக விசாரணை அறிக்கையையும், சாட்சி சுருக்கத்தையும் ஆராய்ந்து பார்த்து எதிர்வரும் வழக்கு விசாரணையின் போது விளக்கமளிப்பதாக தெரிவித்தனர்.

எதிர்வரும் வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் அனைவரையும் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு அறிவிப்பதாக நீதிவான் மன்றுக்கு தெரிவித்ததுடன், விசாரணையின் போது மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டா தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளினால் பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் அனைவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment