கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியவர்கள் எவரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவில்லை என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அவர் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அறிவிப்புடன் தொடர்புடைய பொலிஸ் விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், என்னால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு தொடர்பில் பொலிஸ் பிரிவினர் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். இதன்போது தன்னிடம் இருந்த அனைத்து தகவல்களை பெற்றுக் கொடுத்தேன்.
குறித்த சம்பவத்துடன் கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பில்லை என நான் தௌிவாக கூறினேன். பொலிஸ் பிரிவினர் எந்த அடிப்படையில் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவை அழைத்தார்கள் என தெரியவில்லை.
சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் இல்லாத காரணத்தால் விசாரணைகளை நிறுத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். என்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் பிரிவிற்கு நான் கதைத்தேன். இந்த சட்டத்தின் கீழ் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என பொலிஸ் விசாரணை பிரிவின் தலைவர் எனக்கு தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டி நிர்ணயம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டது. சம்பவம் இடம்பெற்றது 2011 இல். இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு தமக்கு எந்த கடப்பாடும் இல்லை என குமார் சங்கக்காரவின் சட்டத்தரணி கூறியுள்ளார். காரணம் இந்த சட்டம் பிழையானது.
தற்போதுதான் பொலிஸாருக்கு தெரிகிறது ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் தவறானது என்று. பொலிஸார் தவறான விசாரணைகளை ஆரம்பித்து சிக்கிக்கொண்ட பின்னர், விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டது. தகவல்கள் இல்லை என்று கூற முடியாது.
தற்போது தெரிவுக்குழுத் தலைவரிடம் மாத்தரமே பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போதைய கிரிக்கெட் நிர்வாக சபையில் இருந்த முன்னாள் செயலாளரிடம் வாக்குமூலம் பெற்றனரா? தலைவரிடம் பெற்றனரா? நிறைவேற்று அதிகாரியிடம் வாக்குமூலம் பெற்றனரா? அந்த தொடருடன் தொடர்புடைய எவரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை. நான் தௌிவாக கூறியிருந்தேன். யார் யாரிடம் தகவல்களை பெறவேண்டும் என்று. ஒருவரிடம் தகவல்களை பெற்றப்பின்பு விசாரணைகளை நிறைவு செய்ய முடியுமா?
இந்த சட்டத்திற்கு அமைய பொலிஸ் விசாரணை பிரிவிற்கு விசாரணை செய்ய முடியாது. இந்த விசாரணைகள் சர்வதேச கிரிக்கட் சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டும். பொலிஸ் ஊடக பேச்சாளரால் நியாயமற்ற அறிவிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். என்றார்.
No comments:
Post a Comment