(செ.தேன்மொழி)
ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக ரணில் - மஹிந்த கூட்டணி திட்டமிட்ட சேறுபூசல்களை மேற்கொண்டு வருவதாகவும், அதனை நம்பி தவறான முடிவை எடுக்க வேண்டாம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் எதிராக திட்டமிட்ட சேறுபூசல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வளவு காலமும் அமைதியாக இருந்துவிட்டு தேர்தல் நெருங்கியதுடன். ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக ரணில் - மஹிந்த கூட்டணி இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.
பிரசாரங்கள் நிறைவுக்கு வந்ததுடன் எங்களால் அது தொடர்பில் கருத்தும் தெரிவிக்க முடியாது. இதனை உணர்ந்தே இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை ஜோர்தானில் தொழில் புரிந்துவரும் பணிப் பெண்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜோர்தானுக்கான இலங்கை தூதுவர் ஒரு பெண்மணியாக இருக்கும் போதிலும் இந்த பணிப் பெண்கள் தொடர்பில் அக்கறையின்றி செயற்படுகின்றமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் பெரிதாக தவறு ஏதும் செய்யவில்லை. தமது கஷ்டத்தை அதிகாரிகள் உணர்வதற்காக தாங்கள் சாப்பிடும் உணவை போன்றதொரு உணவை அவர்களையும் சாப்பிட்டு பார்க்குமாறு கூறியுள்ளார்கள். இதனால் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகிப்பட்டுள்ளது. இதனால் பாதிப்டைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு பெண்களை அரசாங்கம் உடன் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபுக்களின் பிள்ளைகளை நாட்டுக்கு அழைத்து வருதற்கான பல விமானங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் இந்த சாதாரண பெண்களை அழைத்துவருவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக இதே ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாட்டிலிருந்த தொழிலாளர்களை மாலை அணிவித்து அழைத்து வந்தார்கள். தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது தொடர்பிலே ஆளும் தரப்பினர் அக்கறை கொள்கின்றனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதி காப்பதை நிறுத்திவிட்டு, ஜோர்தானில் இருக்கும் இந்நாட்டு பணிப் பெண்களை நாட்டுக்கு அழைத்துவர எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment