இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் குறித்து அனைத்துத் தரப்பினரும் விசேட அவதானம் செலுத்த வேண்டும் - முன்னாள் சபாநாயகர் கரு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் குறித்து அனைத்துத் தரப்பினரும் விசேட அவதானம் செலுத்த வேண்டும் - முன்னாள் சபாநாயகர் கரு

ஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் ...
(நா.தனுஜா)

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கைத் தொழிலாளர்கள் பல தசாப்தகாலமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறார்கள். தற்போது நாடு அவர்களுக்கு நன்றியுடைய விதமாக செயற்பட வேண்டிய தருணம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் நாட்டிற்குத் திருப்பியழைத்து வரப்படுவதற்கும், அவர்களுக்கான மறுவாழ்வை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் இரக்கமான அணுகுமுறையொன்றைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டில் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிநிலை மற்றும் வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கைத் தொழிலாளர்களின் நிலை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் காலங்களில் இருண்டதொரு நிலையை அனுபவிக்க வேண்டியேற்படும் என்று சர்வதேச ரீதியான பொருளாதாரக் கட்டமைப்புக்களின் கணிப்புக்கள் கூறுகின்றன.

இந்த நிலவரம் தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் விசேட அவதானம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். குறிப்பாகத் தேர்தலை முன்நிறுத்தி வெளியிடப்படும் கொள்கைப் பிரகடனங்களில் தாம் வழங்குகின்ற வாக்குறுதிகள் தொடர்பில் வேட்பாளர்கள் சரிபார்பொன்றைச் செய்ய வேண்டும் என்பதுடன், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நடைமுறையில் சாத்தியமான மீட்புத்திட்டங்களை முன்மொழிய வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அதேவேளை வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கைத் தொழிலாளர்கள் 'நாட்டின் வீரர்கள்' என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகின்றார்கள். பல தசாப்தகாலமாக இவர்கள் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு மீள அழைத்துச் செல்லப்படுவதை எதிர்பார்க்கின்றார்கள்.

நாடு அவர்களுக்கு நன்றியுடைய விதமாக செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும். எனவே வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் நாட்டிற்குத் திருப்பியழைத்து வரப்படுவதற்கும், அவர்களுக்கான மறுவாழ்வை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் இரக்கமான அணுகுமுறையொன்றை பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்றும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment