(நா.தனுஜா)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 70 தொடக்கம் 80 வரையிலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். அதனைத் தொடர்ந்து நாங்கள் அரசாங்கம் அமைக்கும் போது எம்முடன் யார் இணைந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம்முடன் இணைந்து கொள்ளவில்லை. எனினும் அவர்கள் நாம் சரியாக செயற்படும் போது ஆதரித்ததுடன், தவறாக செயற்படுகையில் எதிர்த்தார்கள். அத்தகைய தரப்பினர் இருப்பது அரசாங்கம் சமநிலையுடன் இயங்குவதற்கு அவசியமாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது சஹ்ரான் தலைமையில் கடந்த வருடம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே நாட்டு மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். எனினும் இன்றளவில் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லையென்ற நிலையே ஏற்பட்டிருக்கின்றது.
பட்டப்பகலில் நடைபெறுகின்ற கொலைகள் மற்றும் மர்ம மரணங்களும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினரே போதைப் பொருட்களை விற்பனை செய்வதும் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. தேசிய பாதுகாப்பை ஏற்படுத்துவதிலும், பொருளாதாரத்தை ஸ்திரநிலையில் பேணுவதிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது.
அதேபோன்று தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். மறுபுறத்தில் வியத்மகவைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றார்கள். இவையனைத்தும் அவர்களின் தரப்பு மூன்றாகப் பிளவடைந்திருப்பதையே காண்பிக்கிறது.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறது. அரச உத்தியோகத்தர்களுக்கான ஊதியத்தை வழங்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அரசாங்கம் புதிதாகப் பணத்தை அச்சடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்வதால் பணத்தின் பெறுமதி குறைவடைந்து, பணவீக்கம் அதிகரிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.
அதேபோன்று கடந்த காலத்தில் எமது அரசாங்கம் முன்னெடுத்து வந்த பல்வேறு நலத்திட்டங்கள் புதிய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றினால் ஏற்கனவே வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரம் மேலும் பின்னடைவைச் சந்திப்பதோடு, நாட்டுமக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
நாட்டை முன்னேற்றுவதற்கு இம்முறை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத்தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோருகின்றார். அவ்வாறெனில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை வகித்த, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏன் தேர்தலை நடத்தினார்? ஏனெனில் அப்போது நாடு கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருப்பதையும், அதனைத் தமது அரசாங்கத்தினால் எதிர்கொள்ள முடியாமலிருப்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். அத்தகைய மிகமோசமான நிலையிலிருந்த நாட்டையே எமது நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.
எனினும் அதனைத் தொடர்ந்து நாம் கடன்களை முறையாகச் செலுத்தியதுடன், மக்களுக்கு நிவாரணத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, பொருளாதாரத்தையும் வலுப்படுத்தினோம். அவ்வாறு எந்தவொரு நெருக்கடி நிலையிலும் நாட்டை நிர்வகிக்கக் கூடிய இயலுமையும் செயற்திறனும் ஐக்கிய தேசியக் கட்சியிடம்தான் உள்ளது.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 70 தொடக்கம் 80 வரையிலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். அதனைத் தொடர்ந்து நாங்கள் அரசாங்கம் அமைக்கும் போது எம்முடன் யார் இணைந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம்முடன் இணைந்து கொள்ளவில்லை. எனினும் அவர்கள் நாம் சரியாக செயற்படும் போது ஆதரித்ததுடன், தவறாக செயற்படுகையில் எதிர்த்தார்கள். அத்தகைய தரப்பினர் இருப்பது அரசாங்கம் சமநிலையுடன் இயங்குவதற்கு அவசியமாகும் என்றார்.
No comments:
Post a Comment