சிங்கள - முஸ்லிம் பிளவை சஹ்ரான் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

சிங்கள - முஸ்லிம் பிளவை சஹ்ரான் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன

யுத்தத்திற்குப் பின் சஹ்ரானுக்கு ...
(எம்.எப்.எம்.பஸீர்)

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர், இந்நாட்டின் சமூகம் சிங்களம் - முஸ்லிம் என பிளவுபட்டது. இந்த பிளவினை சஹ்ரான் ஹஷீம் தனக்கு சாதகமாக வலைத்து பயன்படுத்திக் கொண்டார் என அரச உளவுச் சேவையின் முன்னாள் பனிப்பாளரும் தர்போதைய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன தெரிவித்தார்.

இரு சமூகங்களையும் பிளவுபடுத்தும் வெறுப்புப் பேச்சுக்கள் இணையம் ஊடாக பரவலடைந்ததாகவும், அது மத நல்லிணக்கத்தை கடுமையாக பாதித்ததுடன், அது கூட சர்வதேச பயங்கரவாதம் நாட்டுக்குள் வர ஏதுவானதாக அமைந்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சிங்கள முஸ்லிம் இரு தரப்புக்களில் இருந்தும் எதிரெதிரான 150 இற்கும் மேர்பட்ட முறைப்பாடுகள் அப்போது பொலிஸ் நிலையங்கலில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அனைத்து மதங்களையும் உள்ளடக்கும் வண்ணமாக தேசிய கட்டமைப்பொன்றினை உருவாக்குமாறு தான் ஆரம்பத்திலேயே அதிகாரிகளிடம் கோரியதாகவும் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், 256 ஆவது சாட்சியாளராக கடந்த 27 திங்கட்கிழமை முதல் சாட்சியளித்துவரும் நிலையிலேயே தனது 3 ஆவது நாள் சாட்சியத்தின் போது அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். நேற்றையதினம் நான்காவது நாளாகவும் அவரது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையடுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது.

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்றுமுன் தினம் இரவு வரை நீண்ட, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் சாட்சியம் நேற்றும் தொடர்ந்தன. இந்நிலையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்சீவ திஸாநாயக்க ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு அரச உளவுச் சேவை முன்னாள் பனிப்பாளரும் தற்போதைய கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.

No comments:

Post a Comment