
அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, விசாரிக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் பாலித பெனாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மனுவை இன்று (31) பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இத்தடையுத்தரவை விதித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் குறித்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவர்களது மனுவை விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிபதிகள் குழாம், இது தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் பாலித பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக ரூபா. 35.5 மில்லியன் (ரூபா. 355 இ லட்சம்) இலஞ்சம் பெற்றமை மற்றும் வழங்கியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினர்களின் மூன்று பேரின் எழுத்து மூல கோரிக்கை தாக்கல் செய்யப்படாததால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என, தெரிவித்து நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் பாலித பெனாண்டோ ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இது சட்டத்திற்கு முரணானது எனவும், குறித்த முடிவை இரத்து செய்து, தங்களை குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும், மனுதாரர்கள் தமது மனுவில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment