சிலர் நினைக்கலாம் நாங்கள் இதுவரை எந்த சேவையினையும் செய்யவில்லையென்று, நாங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கப்போவது இல்லை - முத்தையா முரளிதரன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

சிலர் நினைக்கலாம் நாங்கள் இதுவரை எந்த சேவையினையும் செய்யவில்லையென்று, நாங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கப்போவது இல்லை - முத்தையா முரளிதரன்

நாங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கப்போவது இல்லை
சிலர் நினைக்கலாம் நாங்கள் இதுவரை எந்த சேவையினையும் செய்யவில்லையென்று. நாங்கள் பல மாவட்டங்களில் எங்களது சொந்த நிதியினைக் கொண்டு பல நற்குண மன்றங்களை உருவாக்கி அதனூடாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். நற்குண மன்றத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஆங்கிலம் கணனிக் கல்வி, தையல், அழகுக்கலை, சமையல் கலை, விவசாயம் போன்றவற்றிற்கான பயிற்சிகளை வழங்கியுள்ளோம். எமக்கு நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம்தான் அம்மன்றம் உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் இம்முறை தேர்தலில் முத்தையா பிரபாகரன் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் கட்டாயம் இம்மாவட்டத்தில் 6 நற்குண மன்றங்களை உருவாக்குவோம் என முத்தையா பிரபாகரனின் சகோதரரும் விளையாட்டு வீரருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

முத்தையா பிரபாகரனுக்கு ஆதரவளிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் நேற்று (22) டயகம சந்திரகாமம் எரோல் தோட்டத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நானும் மலையகத்தில் பிறந்தவன்தான். கண்டியில்தான் நான் பிறந்தேன். எனது அப்பா மஸ்கெலியா பகுதியில் வாழ்ந்தவர். அவரின் முயற்சியால் நாங்கள் இன்று பல்வேறு கம்பனிகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றோம்.

எங்களிடம் பணமும் இருக்கின்றது புகழும் இருக்கின்றது. எங்களுக்கு அரசியலில் வந்துதான் பணமும் புகழும் தேட வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு உண்மையான சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே அன்று முதல் இன்றுவரை நாங்கள் செய்து வந்துள்ளோம்.

நாங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கப் போவதும் இல்லை. இன்று மலையகத்தை எடுத்துக் கொண்டால் ஓரளவு முன்னேறியவர்கள் 3 வீதமும் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட ஏனைய துறையில் உள்ளவர்கள் 15 சதவீதமே ஓரளவு நல்ல நிலையில் உள்ளனர். 85 சதவீதமானோர் மிகவும் துன்பகரமான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எனவேதான் இந்த மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்காக எங்களை ஜனாதிபதியே நேரடியாக அனுப்பி வைத்துள்ளார். இங்கு உள்ளவர்கள் மக்களுக்கு முறையான சேவைகளை முன்னெடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தால் நாங்கள் இங்கு வந்து அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

இதேநேரம் முத்தையா பிரபாகரன் வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் ஊடாக உங்களுக்கு வந்து சேர வேண்டிய சேவைகள் அனைத்தும் முறையாக வந்து சேரும். அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டு துறையினை தேசிய மட்டத்தில் கொண்டு செல்வதற்காக இங்கு ஒரு விளையாட்டு அகடமியினை நிறுவுவேன். நாம் என்ன செய்தாலும் வேலையில்லை வீட்டு பொருளாதாரத்தினை உயர்த்தாவிட்டால் அதற்காக பல்வேறு சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்க உள்ளோம். அதன் இந்த பிரதேசமும் நாடும் முன்னேறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மலையக நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad