தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் தப்பிச்சென்ற கொரோனா நோயாளி, தான் சென்ற பாதை தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று (25) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்தார்.
சுகாதாரப் பிரிவின் அனுமதியுடன் மீண்டும் அவரை விசாரிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நபருக்கு எதிராக, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை மற்றும் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக, அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
போதைப் பொருளுக்கு அடிமையான, குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (24) அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் வைத்து நேற்றையதினமே (24) கைது செய்யப்பட்டு, மீண்டும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment