முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக வடிகமங்காவ வாரியபொல, பாதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். 1952ஆம் ஆண்டு ஜனவரி 07ஆம் திகதி பிறந்த அவர், மரணிக்கும்போது 68 வயதாகும்.
இன்று (05) பிற்பகல் 3.45 மணியளவில், குருணாகல் - புத்தளம் வீதியில், பாதெனிய, மாரகஸ்கொல்ல பிரதேசத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிக்கவெரட்டிய திசையில் பயணித்த அசோக வடிகமங்காவவின் கார், வீதியின் வலது பக்கத்தை நோக்கி திடீரென பயணித்த நிலையில் எதிர்த் திசையில் வந்த சிறிய ரக லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இடம்பெற்ற வேளையில், காரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம் பயணித்துள்ளதோடு, அவர் படுகாயமுற்ற நிலையில், வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த, குறித்த லொறியின் சாரதி, நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சடலம் தற்போது வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்திற்காக போட்டியிடும் அவர், கடந்த 1980ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆனமடுவ இடைத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றுக்கு நுழைந்தார்.
அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் ஆட்சியில் காணி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 1996 இல் வட மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, மாகாண சபை உறுப்பினராக தெரிவான அவர், அச்சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவானார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனிக்கு கட்சிக்கு மாறிய அவர், வட மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளரான மைத்திரிபால சிறசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக மீண்டும் கட்சி மாறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அசோக வடிகமங்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டிருந்தார் என்பதோடு, இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பொதுத் தேர்தல் வேட்பாளராக முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment