டெங்கு பரவலை கட்டுப்படுத்த உடனடியாக தயாராகுங்கள் : ஜனாதிபதி, பிரதமர் கூட்டாக பணிப்புரை - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

டெங்கு பரவலை கட்டுப்படுத்த உடனடியாக தயாராகுங்கள் : ஜனாதிபதி, பிரதமர் கூட்டாக பணிப்புரை

(எம்.மனோசித்ரா)

மழையுடன் கூடிய காலநிலை குறைந்துவரும் நிலையில் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக தயாராகுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி தலைவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

எதிர்கால திட்டங்களை தயாரிப்பதற்காக டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மேல் மாகாணத்திலேயே பதிவாகின்றனர். வேறு பிரதேசங்களில் இருந்து இம் மாகாணத்திற்கு தினமும் பெருமளவானோர் வருகை தருகின்றனர். மேல் மாகாணத்திற்கு முன்னுரிமையளித்து டெங்கு நோயை கட்டுப்படுத்துவதன் மூலமே அவர்கள் நோய் காவிகளாக வெளியே செல்வதை தடுக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்காக மாகாணத்தின் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களின் சுகாதார பிரிவுகளும் சூழல் பொலிஸாரும் செயற்திறமாக செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ்வருட முற்பகுதியில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டினர். நவம்பர் முதல் முறையாக குப்பைகளை அகற்றுதல் மற்றும் கொவிட் நோய்த்தொற்று ஒழிப்புடன் இணைந்ததாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் மக்கள் தமது வீட்டுத்தோட்டங்களை சுத்தமாக வைத்திருந்ததும் இதற்கு காரணமாகும். மாகாணங்களுக்கிடையிலான பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததும் மற்றுமொரு காரணமாகும்.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள், சமய ஸ்தானங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தி சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டது. 

சுகாதார துறை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களுடன் இணைந்து இவ்வாறான இடங்களை கண்காணிக்கும் பொறுப்பு சுற்றாடல் பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெங்கு பரவல் அதிகரிக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

டெங்கு நோயாளி ஒருவர் அரசாங்க அல்லது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அது பற்றி பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து குறித்த இடங்களை உடனடியாக புகை விசுறுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஊடகங்களின் வாயிலாக மக்களுக்கு அறிவூட்டுவது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.

வாரத்தில் ஒரு முறை ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவன தலைவர்கள் ஒன்றுகூடி சுகாதார குழுக்களின் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறும், வெற்றிகரமாக டெங்கு ஒழிப்பை மேற்கொண்டுள்ள நாடுகளின் அனுபவங்களை முன்னுதாரணமாக கொள்ளுமாறும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பணிப்புரை விடுத்தனர்.

மாகாண ஆளுநர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர , அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment