கறுப்பினத்தவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், லூவிஸ்விலே (Louisville) நகரில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டு வரும் வன்முறைகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்தவரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் பொலிஸ் காவலில் உயிரிழந்தமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன.
அமெரிக்க நகரங்களில் ஆறாவது நாளாகவும் வன்முறை வெடித்து வருவதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வன்முறை காரணமாக, சுமார் 40 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை மக்கள் புறக்கணித்துள்ளனர். இது பதற்றமான நிலைப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதாகவும், சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க், சிகாகோ, பிலடொல்பியா, லொஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலகமடக்கும் பொலிஸார் மோதியுள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர்பபுகைப் பிரயோகம் மற்றும் மிளகு தோட்டாக்களை வீசியுள்ளனர்.
பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டன.
பல நாட்களாக தொடரும் இவ்வார்ப்பாட்டத்தின்போது, சுமார் 4,400 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், பொலிஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார்.
அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கறுப்பின மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment