(நா.தனுஜா)
சட்டத்தரணிகள் சங்கத்தின் 2021 ஆம் ஆண்டு தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தவிசாளருமான சாலிய பீரிஸ் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட மற்றும் சக உறுப்பினர்களுக்கு மேலும் கூறியிருப்பதாவது, சட்டத்தரணிகள் சங்கத்தின் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்கான தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்திருக்கிறேன்.
கடந்த 2015 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நான் சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவராக செயற்பட்டேன் என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
அக்காலப்பகுதியில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கும், தொழில்முறையில் கனிஷ்ட உறுப்பினர்களுக்கு உதவுவதற்கும் எனக்குக் கிடைத்த வாய்ப்பு தொடர்பில் பெருமிதமடைகின்றேன்.
சட்டத்தரணிகள் சங்கத்துடன் தொடர்புடைய விவகாரங்களில் கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் இருப்பதற்கே நான் எப்போதும் முயற்சித்திருக்கிறேன்.
அதேபோன்று கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து இத்துறையில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் வழங்கிவரும் ஒத்துழைப்பை நினைவுகூர்கிறேன்.
இன்னும் சில மாதங்களில் நான் உங்கள் மத்தியில் வருவதுடன், உங்களை செவிமடுப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment