தமிழர்கள் மீதான அடக்குமுறையை தேர்தலுக்கான ஆயுதமாக கோத்தாபய அரசு பயன்படுத்துகிறது - சிவமோகன் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 20, 2020

தமிழர்கள் மீதான அடக்குமுறையை தேர்தலுக்கான ஆயுதமாக கோத்தாபய அரசு பயன்படுத்துகிறது - சிவமோகன்

எப்பொழுதும் எந்த எந்த காலங்களிலும், தமிழர்களை எந்தவோரு சிங்கள அரசு அடக்கியாள முற்படுகின்றதோ அவர்களைத்தான் சிங்கள மக்கள் தெரிவுசெய்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு கோத்தாபய அரசும் விதிவிலக்கல்ல. எனவேதான் கோத்தாபய அரசும் தமிழர்கள் மீதான அடக்குமுறையை தன்னுடைய தேர்தல் கால அறுவடைக்கான ஆயுதமாக பாவித்துக் கொண்டிருக்கின்றது. 

இவ்வாறு வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - அம்பகாமம், மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் விசேட விழிபாடுகளை மேற்கொண்டிருந்த அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழர்களின் ஒற்றுமையை குலைத்துவிட்டால் தமிழர்களுடன் எதுவும் பேச தேவையில்லை என புதிதாக பொறுப்பேற்றுள்ள கோத்தாபய அவர்களை ஜனாதிபதியாகக் கொண்டுள்ள இந்த அரசு எண்ணிக்கொண்டிருக்கின்றது. 

ஐ.நா சபையில் அவர்கள் வழங்கிய வாக்குறுதியில் இருந்து, அவர்கள் தற்போது பின்வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிச்சயமாக பின்வாங்குதல் என்ற அந்த அறிக்கை கூட தேர்தலுக்காக அவர்கள் பயன்படுத்திய ஒன்றாகவே இருக்கும்.

ஐ.நா சபையில் வழங்கப்பட்ட வாக்குறுதியிலிருந்து ஒரு அரசு, அல்லது ஒரு நாடு பின் பின்வாங்குதல் என்பது சாத்தியப்படாத ஒன்றாகும். மீள் நிகழாமையினை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இங்கு நடந்த அநியாயங்கள் விசாரிக்கப்பட்டு அதற்கு நீதி வழங்க வேண்டும் என்பதனையும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்.

எனவே இவ் விடயங்களெல்லாம் இருக்கும்போது, தமிழர்களுடைய ஈழவிடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின், நாம் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அதை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

அதை உருக்குலைக்கும் முகமாக 32 சுயேட்சைகள் இன்னும் பல பல கட்சிகள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக 477 பேர் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டிக்காக களமிறங்கியிருக்கின்றார்கள். அதன் தாற்பரியம் எமது மக்களுக்கு புரியும்.

எனவே எமது தமிழர்களின் ஒற்றுமையை நாங்கள் நிலைநிறுத்தவில்லையொன்றால் மீண்டும் எமது காணிகளையும், பிள்ளைகளையும் பறிகொடுத்து நாம் ஒரு இக்கட்டான சூழலிற்கு தள்ளப்பட வேண்டியவர்களாக இருப்போம் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். 

ஏன் என்றால் கோத்தாபய ராஜாபக்ச அரசு ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையும் இராணுவ மயப்படுத்திவிட்டது. அதுவும் தேர்தலிற்கு முன்னரே கோத்தாபய அரசு இராணுவ மயப்படுத்திவிட்டார்கள். ஏனெனில் எவர் தமிழனை அடக்கியாள முற்படுகின்றாரோ அவரைத்தான் சிங்கள மக்கள் ஆதரிப்பார்கள் என்றொரு கதையை அவர்கள் அங்கு புகுத்தி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் அதுதான் உண்மையோ என எண்ணத் தோன்றுகின்றது. உண்மையும்தான், எப்பொழுதும் எந்த எந்த காலங்களிலும் தமிழர்களை எந்தவோரு சிங்கள அரசு அடக்கியாள முற்படுகின்றதோ அவர்களைத்தான் சிங்கள மக்கள் தெரிவுசெய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதற்கு கோத்தாபய அரசும் விதிவிலக்கல்ல. எனவேதான் கோத்தாபய அரசும் தமிழர்கள் மீதான அடக்குமுறையை தன்னுடைய தேர்தல்கால அறுவடைக்கான ஆயுதமாக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே தமிழ் மக்கள் அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமாக இருந்தால் ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும்.

சிதறிப்போயிருக்கும் தேங்காய்த்துளிகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறவைக்க வேண்டும். வெற்றிபெற வைப்பார்கள் என நம்புகின்றேன். என்றார்.

No comments:

Post a Comment