முன்னிலை சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளோயிட், அமெரிக்காவில் இனவாதத்தினால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக, உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அமைய, முன்னிலை சோசலிச கட்சியினால் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம் (09) பிற்பகல் 1.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று திட்டமிடப்பட்டிருந்தது.
குற்ற வழக்கு தொடர்பான கோவைச் சட்டத்தின் 106 (1) பிரிவிற்கமைய, அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலோ அல்லது அப்பகுதியிலோ ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதை தடுப்பதற்கான உத்தரவை வழங்குமாறு, கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இத்தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் பிரதான செயலாளர் சேனாதீர குணதிலக மற்றும் அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு எதிராகவும் பொதுமக்களுக்கும் இத்தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த உத்தரவை மீறுவது, இலங்கையின் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 185 ஆவது பிரிவிற்கமைய, தண்டனைக்குரிய குற்றமாகும் என, நீதிமன்ற உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் நிலை கருதி குறித்த தடையுத்தரவை பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

No comments:
Post a Comment