(எம்.எப்.எம்.பஸீர்)
பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தின் காட்டுப் பகுதியில், காட்டை அழித்து சட்ட விரோத கட்டுமானங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தததாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு தொடர்பில் விடயங்களை முன்வைக்க எதிர்வரும் 29 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மீள அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரண்டாவது தடவையாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் நிஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் இந்த அறிவித்தலை பிறப்பித்தனர்.
குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை நேற்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்க ஏற்கனவே பிரதிவாதிகளுக்கு உத்தர்விட்டிருந்த நிலையில், பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் சட்டத்தரணி ஒருவரோ அல்லது அவரோ மன்றில் ஆஜராகவில்லை. இதனையடுத்தே நீதிபதிகள் இரண்டாவது முறையாகவும் அவருக்கு அறிவித்தல் பிறப்பித்தனர்.
2015 இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வனவளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த 2018 ஆம் வருடம் நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது மீள விசாரணைகள் இடம்பெறுகின்றன.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மேன் முறையீட்டு நீதிமன்றில் தககல் செய்த இந்த ரீட் மனு, மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் விசாரிக்கப்பட்ட நிலையில் கடந்த 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி தீர்ப்பறிவிக்கப்படவிருந்தது. இந்நிலையில் அந்த தீர்ப்பை அறிவிக்க குறித்த நீதிபதி விருப்பமின்மையை வெளியிட்டதால், அந்த மனுவை மீள ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி முடிவு செய்துள்ளார். தீர்ப்பு வழங்க திகதி குறிப்பிடுவதற்கு முன்னர் 4 தடவைகள் , மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமரவர்தன வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான பின்னனியிலேயே குறித்த வில்பத்து விவகார மனு மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment