மண் கொள்ளைக்காரர்கள், வட்டிக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என கிழக்கு மாகாணத்திலே வாக்குப் பிச்சை கேட்டு பலரும் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் நாம் எமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் இருந்து மக்களுக்காக அவர்களது உரிமைகளுக்காக உண்மையாகவே போராடிய நமது முன்னாள் போராளிகளையும் எமது மாகாணத்துக்கு பல திட்டங்களை கொண்டு வரக்கூடிய புத்திஜீவிகளையும் களத்தில் நிறுத்தி இருக்கின்றோம்.
எனவே மக்கள் உண்மையானவர்கள் யார், ஏமாற்றுக்காரர்கள் யார் என்பதை உணர்ந்து மக்கள் தமது வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
இன்று எமது கட்சியானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் உடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றது. அவர்கள் இருவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே நாங்கள் தனித்துவமாக கிழக்கில் போட்டியிடுகின்றோம்
ஏனெனில் மொட்டு கட்சியில் போட்டியிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எமது தமிழ் மக்களின் உரிமைகளை, அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்கள் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்து எமது தாயகம் அபிவிருத்தி அடைய பாடுபடுவோம்.
இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று அரசாங்கத்துடன் இணைந்து பல அபிவிருத்திகளை எமது கிழக்கு மாகாணத்தில் காண்போம் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தையல் மெசின் சின்னத்திலே இம்முறை தேர்தலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடுகின்றதுடன், வடக்கு கிழக்கிலே யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய இடங்களில் எமது கட்சி புத்திஜீவிகள், முன்னாள் போராளிகளை இணைத்து இந்த தேர்தல் களத்திலே இறங்கியிருக்கின்றோம்.
அதேவேளை நான் அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடுகின்றேன். அங்கு நான் வெற்றி பெறுவது உறுதியான முடிவு. அம்பாறை மாவட்ட மக்கள் அனைவரும் என்னுடன் கைகோர்த்து நிற்கின்றார்கள். அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது ஒரு ஆசனத்தையாவது மட்டக்களப்பு மக்கள் பெற்றுத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
கடந்த 14 வருடங்களாக நிறைய வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செய்து கொடுத்திருக்கின்றேன். வேலை வாய்ப்புக்கள், குடிநீர் விநியோகங்கள், மின்சார விநியோகங்கள், நீர்ப்பாசனங்கள், குளங்கள், போக்குவரத்து வீதிகள், பாலங்கள் என பலதரப்பட்ட வேலைகளை நான் செய்திருக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற பிரச்சினைகள் மற்றும் கடந்த காலங்களிலே விடுபட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், யுவதிகள், பாதிக்கப்பட்ட போராளிகள், என்றெல்லாம் பல பிரச்சனைகளை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறு பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆகவே இதற்கெல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வை நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட நாம் திட்டமிட்டிருக்கின்றோம்.
இன்று நாங்கள் போராளிகளை களம் இறக்கியிருக்கின்றோம். தளபதிகளாக இருந்தவர்களை களம் இறக்கியிருக்கின்றோம். ஆகவே போராட்டத்திலே பற்று வைத்திருப்பவர்களாக இருந்தால் நிச்சயமாக எங்கள் வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டுமென்பதை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
முதலில் எங்கள் கட்சியிலிருந்து திருட்டுத்தனமாக ஓடிச்சென்ற ஜெயானந்தமூர்த்தி தற்பொழுது எங்கள் கட்சியில்தான் போட்டியிடுவதாக பொய்ப்பிரசாரங்களை மக்கள் மத்தியிலே செய்து வருகின்றார். அவரை நாங்கள் எமது கட்சியிலிருந்து விலக்கி நீண்ட காலமாகின்றது. எனவே அவரைப் போன்றவர்கள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment