கரைவலை மீன்பிடி முறையில் இயந்திர சுழலியை (வின்ஞ்) பொறிமுறையை பயன்படுத்துவது தொடர்பில் இறுதித் தீரமானம் மேற்காள்ளப்படும் வரை இயந்திர சுழலியை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் கரை வலை முறையிலான கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் உளவு இயந்திரத்தில் இயந்திர சுழலியை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையிலே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உழவு இயந்திரம் மற்றும் இயந்திர சுழலி பயன்படுத்தப்படுவதனால் பாரம்பரிய சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாவும் கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு மீனவர் பிரதிநிதிகளினால் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதேவேளை, கரைவலை செயற்பாட்டிற்கு தேவையான தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களினால் குறித்த பொறிமுறை பயன்பாட்டை தெரிவு செய்துள்ளதாக தெரிவித்த கரை வலை தொழிலில் ஈடுபடும் தரப்பினர், அதற்காக தாங்கள் பெருமளவு மூதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுழலி இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்கள் தொடர்பில் நாரா எனப்படும் நீர் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக விஞ்ஞானபூர்வ ஆய்வுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மேற்கொள்ளப்டுகின்ற தீர்மானம் கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment