'சர்வாதிகார நிழல் கொண்ட பூரண இராணுவ ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது' : ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, June 21, 2020

'சர்வாதிகார நிழல் கொண்ட பூரண இராணுவ ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது' : ரணில் விக்கிரமசிங்க

(எம்.மனோசித்ரா)

ஜனநாயக ஆட்சி சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஆகிய இரண்டையுமே முற்றாக ஒழித்துக்கட்டி சர்வாதிகார நிலைகொண்ட பூரண இராணுவ ஆட்சியை நோக்கிய பயணமாகவே தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்பாடுகள் காணப்படுகிறது. எனவே இலங்கையில் மக்களை நேசிக்கக்கூடிய ஜனநாயக ஆட்சியை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட அறிவித்தலொன்றில் இதனைக் கூறிய அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது நாம் முன்னெடுத்த போராட்டத்தினால் நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பன பாதுகாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு இந்த போராட்டத்தை ஆரம்பித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஜனநாயக உரிமைகளை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் அவரது செயற்பாடுகளைக்கூட இடைநிறுத்தக்கூடிய அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது.

பொதுஜன பெரமுனவால் இவற்றுக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரையும் தலைவரையும் பகிரங்கமாகத் தூற்றுகின்றனர்.

பொலிஸ் அதிகாரிகளுடன் செயற்பட இராணுவத்தினரை நியமிக்கின்றனர். பொலிஸார் புறந்தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று கூறிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். 

ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் சடலம் அண்மையில் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டது.

அரச சேவை ஆணைக்குழுவின் நிலைமையும் இது போலவே உள்ளது. அவர்களை மாற்ற முடியாத சந்தர்ப்பங்களில் இராணுவ வீரர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் திணைக்களங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுகின்றனர். அவர்களிடமே முக்கிய பொறுப்புக்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படுகின்றன. 

விசேட ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளன. எமது நாட்டிலுள்ள இராணுவத்தினர் உலகிலேயே சிறந்த வீரர்களாவர். போராட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கே அவர்கள் பொறுத்தமானவர்கள். அவற்றுடன் தொடர்புடைய பொறுப்புக்களை அவர்களிடம் கையளிக்கலாம்.

இலங்கையின் நிர்வாக சேவையை யுத்தத்திற்கு அனுப்பினால் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும். யாழ்ப்பாணத்திற்கு யுத்தத்திற்கு அனுப்பினால் அது காலியிலேயே நிறைவுக்கு வரும். அதில் திறமை இல்லை. 

ஆனால் நாட்டை நிர்வகிப்பதற்கு பிரதேச செயலகங்கள், காணிகளுடன் தொடர்புடைய விடயங்கள் உள்ளிட்டவற்றை செய்வதற்கு திறமை அத்தியாவசியமானதாகும். இதனை இராணுவத்தினரால் செய்ய முடியாது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.

No comments:

Post a Comment