பாதாள உலக செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், உட்பட பாரிய குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்திற்கு சிறைச்சாலை திணைக்களம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென புதிய சிறைச்சாலை ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்தார்.
இதற்கு சகல சிறைச்சாலை அதிகாரிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூறிய அவர், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் சிறை அதிகாரிகளுக்கு தன்னிடம் இருந்து எந்த மன்னிப்பும் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சிறைச்சாலை ஆணையாளர் நேற்று கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், பாதாள உலகத்துடன் தொடர்புள்ள குற்றவாளிகளினால் சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க விசேட திட்டம் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும். சிறைச்சாலைக்குள் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க நான் தயாராக இருக்கிறேன்.
பாதாள உலக நபர்கள், போதைப் பொருள் வியாபாரிகளிடமிருந்து எத்தனை அழுத்தம் வந்தாலும் அதற்கு பின்வாங்காது தைரியமாக செயற்படும் வகையில அதிகாரிகளை மாற்றியமைப்பேன். இத்தகையோருக்கு உதவுபர்களுக்கு உச்ச பட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.
சிறைச்சாலைகளில் பாரிய நெரிசல் காணப்படுகிறது. 173 வீதமாக இந்த நெரிசல் உள்ளதோடு கொழும்பிலுள்ள சிறைகளில் 300 முதல் 400 வீத நெரிசல் காணப்படுகிறது.
சிறைச்சாலைகளிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவியாக இருக்கும் கைபேசி,தொலைபேசி என்பன எக்காரணம் கொண்டும் சிறைச்சாலைகளுக்குள் கொண்டுவர முடியாதவாறு திட்டம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment