போலிக் காரணங்களை கூறாது துரிதமாக தேர்தலை நடத்தவும் - பொதுஜன பெரமுன கூட்டுக் கட்சி தலைவர்கள் வலியுறுத்து - News View

About Us

About Us

Breaking

Monday, June 8, 2020

போலிக் காரணங்களை கூறாது துரிதமாக தேர்தலை நடத்தவும் - பொதுஜன பெரமுன கூட்டுக் கட்சி தலைவர்கள் வலியுறுத்து

போலிக் காரணங்களை கூறிக் கொண்டிருக்காது துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆ​ணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுஜன பெரமுன கூட்டுக் கட்சிகள் கோரியுள்ளன.

ஆணைக்குழு உறுப்பினர் ஹூலின் கூற்றினால் பொதுஜன பெரமுனவிற்கு அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக நீதியை நிலைநாட்ட ஆணைக்குழு எத்தகைய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவை கேள்வி எழுப்பியுள்ளன.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ், பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மம்பில ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் சூழலுக்கு பாதிப்பற்ற முறையில் தேர்தலை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியதாவது, புதிய பாராளுமன்றமொன்றை நியமிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தனது அதிகாரத்திற்கமைய செயற்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை ஆணைக்குழு செயற்படுத்தியிருக்கையிலே உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளித்துள்ளது. தேர்தல் தினத்தை துரிதமான அறிவிக்குமாறு ஆணைக்குழுவை கோருகிறோம். தாமதிக்கப்பட்ட விருப்பு வாக்கு இலக்கங்களை வர்த்தமானியில் வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தல் செயற்பாடுகளை மிகவும் அமைதியாகவும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். சூழலுக்கு பாதிப்பின்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னெடுத்த முன்மாதிரியை இம்முறையும் முன்னெடுக்க இருக்கிறோம் என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ், நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தேர்தலை இனியும் ஒத்திவைப்பது உகந்ததல்ல. சுகாதார தரப்பின் பரிந்துரைக்கமைய துரிதமாக தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தல் நடத்துவதற்கான சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஹூலின் செயற்பாட்டினால் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. அரசாங்கத்தையும் நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

பேராசிரியர் ஹூலின் செயலை ஆணைக்குழு அங்கீகரிக்கிறதா?அவரின் கூற்றினால் பொதுஜன பெரமுனவிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை ஆணைக்குழு ஏற்கிறதா? நீதியை நிலைநாட்ட என்ன நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ளது.

இது தொடர்பில் கட்சி செயலாளர் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அவர் கூறினார்,

பிவிதுரு ஹெலஉருமய கட்சி தலைவர் உதய கம்மம்பில, தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும்.வாக்குப் பெட்டி தயாரிக்க வேண்டும். ஆவணங்கள் தயாரிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலை நடத்த முடியாது என ஆணைக்குழுவினால் கூற முடியாது. 03 மாதங்களுக்கு மேல் தூங்கியிருந்துவிட்டு தேர்தல் நடத்த முடியாதென்று கூறுவதை ஏற்க முடியாது. தொடர்ந்தும் பொய்க் காரணங்கள் கூறாது மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ 60 மாதங்களுக்கு ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அதில் 10 வீதம் முடிந்துவிட்டது. 69 இலட்சம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற இடமளிக்காமல் இருப்பது அநீதியாகும் என்றும் அவர் கூறினார். 

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment