இளவயதினரை இலக்கு வைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள்! - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

இளவயதினரை இலக்கு வைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் உள்ள பல பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரம் அதிகரித்துக் காணப்படுவதுடன், சமூக சீர்கேடுகளும் இடம்பெறுவதாக மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இங்குள்ள சில பிரதேசங்களில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். இக்குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெறுகின்றன.

போதைப் பொருள் வியாபாரிகள் ஊரடங்கு வேளையின் போது உள்வீதிகளைப் பயன்படுத்தி கிராமப் புறங்களுக்கு போதைப்பொருட்களைக் கடத்துவதாக தெரியவருகின்றது. 

கல்குடா தொகுதியில் உள்ள ஓட்டமாவடி, வாழைச்சேனை, மிறாவோடை, மாஞ்சோலை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை, நாவலடி போன்ற பிரதேசங்களுக்கு போதைப் பொருள் வியாபாரிகள் வந்து செல்வதாகவும், இப்போதைப் பொருள் வியாபாரிகளின் மற்றும் போதைப் பாவனையாளர்களின் நடமாட்டம் ஊரடங்கு அமுலிலுள்ள போது கூடுதலாக இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இங்கு போதைப் பொருட்களை கொண்டு வந்து சேர்க்கும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்று மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வாழைச்சேனை, ஓட்டமாவடி, மிறாவோடை, மாஞ்சோலை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை, நாவலடி போன்ற பிரதேசங்களில் போதை மாத்திரைகளை இளவயதினருக்கு விற்பனை செய்யும் கும்பல்கள் நடமாடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இளவயதினரின் எதிர்காலம் பாழாகின்றது. 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களைக் கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கைது செய்வதற்கு பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி உதவ வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதென பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மக்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் மீது கூடிய அக்கறை செலுத்த வேண்டும். அந்த வகையில், போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்ய மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதேசமயம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெறுகின்ற சட்டவிரோதச் செயல்களைத் நடைபெற்று தடுக்கும் வகையில் பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள தமிழ்ப் பிரதேசங்களில் இளைஞர்கள் மத்தியில் மதுப் பாவனை அதிகரித்து வருவதாகவும், முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் தெரியவருகிறது. பெரும்பாலும் இவ்வாறான பழக்கம் 15 வயது தொடக்கம் 30 வயதுடைய இளைஞர்களிடத்தில் காணப்படுகின்றது. இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பாவித்து வாகனங்களைச் செலுத்துவதால் அதிக விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்த பின்னர் வாகனத்தைச் செலுத்தும் போது முன்னால் வரும் வாகனம் மற்றும் பாதசாரிகளின் தூரத்தை சரியாகக் கணிக்க முடியாமல் விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

எனவே எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்வு கருதி இப்பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தையும் பாவனையையும் அடியோடு ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment