(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தங்களின் கட்சி உள்ளக பிரச்சினையை தீர்த்துக் கொள்ள மக்களின் ஜனநாயக உரிமையினை சவாலுக்குட்படுத்தியுள்ளமை தவறான செயற்பாடு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது. வைரஸ் பரவல் இதுவரையில் சமூக தொற்றாகவில்லை. ஆகவே பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் பாதுகாப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்துடன் வாழ மக்கள் தங்கனை பழக்கப்படுத்திக் கொண்டார்கள். பொதுத் தேர்தலை விரைவாக நடத்துவதே அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சியினர் தங்களின் கட்சி உள்ளக பிரச்சினையை தீர்த்துக் கொள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை கேள்விக்குற்படுத்துவது பொருத்தமற்றமாகும்.
எதிர்த் தரப்பினரது உள்ளக பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதற்கு தீர்வை பெற்றுக் கொள்ளவே இவர்கள் பொதுத் தேர்தலை நடத்த குறித்தொதுக்கிய திகதியை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்கள். இச்செயற்பாடு மக்களின் ஜனநாயக உரிமைக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத் தேர்தல் எப்போது இடம் பெற்றாலும், பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும். பலமான அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற்றால் மாத்திரமே வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் பொதுத் தேர்தலில் ஏற்படாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆதரவினை பெற்று பலமாக அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment