(நா.தனுஜா)
தேர்தல் வேளையில் ஊடகங்கள் மக்கள் பக்கம் நிற்பதுடன், எந்தவொரு அரசியல் பக்கச்சார்புமின்றி உண்மையை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது. எது எவ்வாறெனினும் சில ஊடக நிறுவனங்கள் பக்கச்சார்பாகவே செயற்படுகின்றன என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய விசனம் வெளியிட்டிருக்கிறார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊடகங்கள் பக்கச்சார்பின்றி நடுநிலையாக செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கரு ஜயசூரிய அவ்வப்போது தனது டுவிட்டர் பதிவுகளின் ஊடாக வலியுறுத்தி வருகின்றார்.
அந்த வகையில் தேர்தல் காலத்தில் ஊடகங்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து அவர் செய்திருக்கும் டுவிட்டர் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, தேர்தல் வேளையில் ஊடகங்கள் மக்கள் பக்கம் நிற்பதுடன், எந்தவொரு அரசியல் பக்கச்சார்புமின்றி உண்மையை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது.
எது எவ்வாறெனினும் சில ஊடக நிறுவனங்கள் பக்கச்சார்பாகவே செயற்படுகின்றன. அவை கொள்கை ரீதியில் அரசியல் கட்சிகளை மக்கள் அணுகுவதற்கு உதவுவதற்குப் பதிலாக, சேறுபூசும் அரசியல் கலாசாரத்தையே காண்பிக்கின்றன என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதேபோன்று நாட்டின் பொருளாதாரநிலை தொடர்பிலும் பதிவொன்றைச் செய்திருக்கும் அவர், 'சுயாதீனமானதொரு நிதிக்கொள்கையைக் கொண்டிருக்கும் நாடுகளால் நீண்ட காலத்திற்குப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் முடிந்திருக்கிறது.
மத்திய வங்கி மற்றும் நாணயச் சபை என்பன தொழில்முறை அடிப்படையிலும், மனிதாபிமான ரீதியிலும் தீர்மானங்களை எடுக்கக்கூடிய இடைவெளியை வழங்குவது சுபீட்சமான நாட்டை உருவாக்குவதற்கு உதவும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment