”நாம் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றோம்” : கருணாவின் கூற்றுக்கு ருவன் விஜேவர்தன போர்க்கொடி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 20, 2020

”நாம் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றோம்” : கருணாவின் கூற்றுக்கு ருவன் விஜேவர்தன போர்க்கொடி

(எம்.மனோசித்ரா)

மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக கருணா அம்மான் தெற்கிலும், வடக்கு மற்றும் கிழக்கிலும் வெவ்வேறு மாதிரியாக கருத்துக்களைக் கூறி வருகின்றார். இவர் போன்ற சந்தர்ப்பவாதிகளை மக்களை ஏமாற்றுவதற்கு அறிவுள்ள மக்கள் சமூகம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் வகையில் களமிறங்கியுள்ள விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், 'பிரதமர் என்னிடம் பேசினார். இம்முறை தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு பிரவேசியுங்கள். ஏன் சிரமப்படுகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நான், 'நான் இம்முறை போட்டியிட்டுகின்றேன்.' என்று கூறினேன். நான் கொரோனாவை விடவும் ஆபத்தானவன் என்று காரைத்தீவு தலைவர் கூறியிருந்தார். ஆம் நான் அவ்வாறானவன் தான். கொரோனாவால் 9 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். ஆனால் நாம் ஒரே இரவில் 2000 - 3000 இராணுவத்தினரைக் கொன்றுள்ளோம். அனைவரும் அறிவீர்கள் தானே ? கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கானோர்.' என்று கருணா அம்மான் கூறினார்.

இவரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த கருத்துக்கள் நாட்டின் சட்ட கட்டமைப்பிற்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசப்பற்று என்பதைப் பற்றி தெற்கிற்கு செல்லும் போது பேசுபவர், வடக்கு கிழக்கில் சென்று ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொன்றதாகக் கூறி மக்களிடம் வாக்குகளைக் பெற முயற்சிப்பது கவலைக்குரியதாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருணா அம்மான் போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு அவரது கட்சியில் உப தவிசாளர் போன்ற பதவிகளை வழங்கியிருப்பதன் அரசியல் நோக்கம் என்ன ? மேலும் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு அறிவுள்ள மக்கள் சமூகம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment