அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளன : தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 20, 2020

அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளன : தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்டத்தில் மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல்வேறு விதமான முறைகேடுகள் இடம்பெருவதாகவும், மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் நேற்று சனிக்கிழமை (20) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மாவட்டத்தில் சில அரச திணைக்கள அதிகாரிகள் பகிரங்கமாக இலஞ்சம் பெறுகின்றார்கள். குறிப்பாக புவிச் சரிதவியல் திணைக்களம், வன வளத் திணைக்களம், பொலிசார் மற்றும் வேறு சில திணைக்கள அதிகாரிகளும்.

மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல்வேறு விதமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. மணல் அனுமதிப்பத்திரம் பெறுபவர்களிடம் ஒவ்வொரு மாதமும் இலஞ்சம் பெறுகின்றனர்.

இந்த அதிகாரிகள் இலஞ்சம் பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளதுடன் பலரின் ஒப்புதல் வாக்குமூலமும் எம்மிடம் உண்டு. கடற்றொழிலுக்கு மரம் (தடி) வெட்டுவதிலும் மிக மோசமாக இலஞ்சம் பெறுகின்றனர்.

சட்ட விரோத மணல் அகழ்விற்கு பொலிசார் இலஞ்சம் பெறுவதுடன் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு டிப்பர் லோட் மணல் போய் சேருவதற்கு 5 ஆயிரம் தொடக்கம் 7 ஆயிரம் ரூபாய் வரைக்கும் பொலிசாருக்கு இலஞ்சம் கொடுப்பதாக மணல் வியாபாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக இலஞ்சம் பெறும் அதிகாரிகள் பெயர்பட்டியல் சமர்ப்பிக்க முடியும். இந்த அதிகாரிகள் மீது வருமானத்திற்கு மேலதிகமாக சொத்து சேர்த்தமைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடாத்துவதுடன் வருமான வரி திணைக்களம் இவர்கள் சொத்துக்களை பரிசீலினை செய்ய வேண்டும்.

மணல் அனுமதிப்பத்திர விடயத்தில் தற்போது உள்ள முறைமை ஊழலுக்கு வழி ஏற்படுத்துகின்றது. புதிய வழிமுறையை ஏற்படுத்துங்கள். இந்த மண், மரம் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் நாடு முழுவதும் இலஞ்சம் பெறுகின்றார்கள்.

இவ்விடயம் சம்மந்தமாக முன்னாள் ஜனாதிபதிக்கும், ஏனைய பல அதிகாரிகளுக்கும் பல கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை. ஊழலை எல்லோரும் ஆதரிப்பதாகவே தெரிகின்றது. நீங்களாவது இந்த இலஞ்ச ஊழலை கட்டுப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். 

மரமும், மண்ணும் இல்லாவிட்டால் மனிதன் ஆரோக்கியமாக உயிர் வாழ முடியாது. கொடுமையிலும் பெருங்கொடுமை இலஞ்சம் பெற்றுக் கொண்டே அனுமதிப்பத்திரம் வழங்குவதுடன் 5 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரை இலஞ்சம் பெறுகிறர்கள். ஒவ்வொரு கட்ட நகர்விற்கும் ஒவ்வொரு விதமான தொகை அறவிடுகின்றார்கள். சட்ட விரோத மண் அகழ்விற்கும் பெருந்தொகை பணம் பெறுகின்றனர். 

எனவே இவ்விதமான சட்டவிரோத இலஞ்சம் பெறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இலஞ்சம் பெறும் அதிகாரிகளின் பெயர்பட்டியலை தங்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றோம் என்பதையும் தயவுடன் அறியத் தருகின்றேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment