தமிழர் விடுதலை கூட்டணியை நாம் யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கவில்லை, அழுது திரிந்தவர்தான் சேனாதிராஜா - ஆனந்தசங்கரி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 20, 2020

தமிழர் விடுதலை கூட்டணியை நாம் யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கவில்லை, அழுது திரிந்தவர்தான் சேனாதிராஜா - ஆனந்தசங்கரி

தேர்தலில் தோல்வியடைந்து விட்டு பாராளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நானே என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த காலத்தில் பல்வேறு அமைப்புகள் ஒன்றாக இருந்து உருவாக்கிய ஒற்றுமை தற்போது மோசமான நிலைக்கு சென்றுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணி சில்லறை கட்சியல்ல.

மட்டக்களப்பில் குத்தகைக்கு விட்டிருப்பதாக சொல்கிறார்கள். தமிழர் விடுதலை கூட்டணியை நாம் யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கவில்லை. ஆனால் அங்கு ஒருவரை வாடகைக்கு பெற்றுள்ளார் சேனாதிராஜா. வரலாறு தெரியாதவர்களே இவ்வாறு கதைக்கின்றனர்.

தங்களது மோசமான நிலையை மூடிமறைப்பதற்காக அனைத்து பழியையும் எம்மீது போடுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை தமிழர் விடுதலைக் கூட்டணி எந்த விதமான தப்பினையும் செய்யவில்லை. மக்களை காட்டியும் கொடுக்கவில்லை அவர்களுக்கு விரோதமான செயற்பாடுகள் எதனையும் செய்யவில்லை.

தந்தை செல்வா கூட்டணி அமைத்த உடனேயே தமிழரசு கட்சி மூடப்பட்டுவிட்டதுடன், தமிழரசு கட்சியும், தமிழ் காங்கிரசும் ஒன்று சேர்ந்துவிட்டது.

அதன் பின்னர் அவர் உயிருடன் இருந்த 2 வருடங்களும் இறந்த பின்னர் 26 வருடங்களென 28 வருடங்கள் இயங்காமல் இருந்த தமிழரசுக் கட்சியை தமிழ் செல்வன் அங்கிகரித்ததுடன் விடுதலைப் புலிகள் சார்பிலே நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த தேர்தலில் கூட்டணியை ஒரு சிறிய கூட்டமோ சிறிய கருத்தரங்கோ வைக்கவிடவில்லை. கூட்டணிக்காக ஒருவரும் வாகனம் ஓட முடியாது. அனைத்து வாகனங்களும் தமிழ் கூட்டமைப்பிற்குத்தான் ஓட முடியும் என்றனர். கூட்டணிக்கு ஆதரவானவர்களிடம் சென்று வாக்கு சீட்டை பெற்றுக்கொண்டனர்.

சேனாதிராஜாவின் வாகன அனுமதிப்பத்திரம் 40 மில்லியனுக்கு விற்றார்கள். நேற்றுப்பிறந்த புதிய தலைவர் சுமந்திரன் 62 மில்லியனுக்கு அனுமதிபத்திரம் எடுத்திருக்கின்றார்.

இந்த விடயங்களை சம்பந்தர் கதைக்கமாட்டார். அவருக்கு பல அனுமதிப்பத்திரங்கள் இருக்கின்றது. ஏனெனில் நியமன உறுப்பினர்களாக இருப்பவர்களும் அவருக்குதானே பத்திரங்களை கொடுப்பது. நான் எந்த இயக்கத்தையும் பேசவில்லை. ஒவ்வொரு இயக்கமும் என்ன செய்தது என்று அனைவருக்கும் தெரியும்.

தன்னை பாராளுமன்ற உறுப்பினராக்காவிட்டால் கட்சியைவிட்டு போயிருவேன் என்று சொன்னவர் தான் சேனாதிராஜா. அவருக்கு நானே பதவியை கொடுத்தேன் இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்.

அதனையடுத்து மூன்று வருடங்களிற்கு பின்னர் வந்த தேர்தலில் தோல்வியடைந்து தனக்கு ஓய்வூதியம் இல்லை என்று அழுதுகொண்டு திரிந்தார். இரண்டாம் தரமும் நியமன உறுப்பினராக அவரை நானே போட்டேன். இதுதான் வரலாறு. எனது கை சுத்தம். நான் யாரையும் ஏமாற்றவில்லை. பொய் சொன்னதும் இல்லை என தெரிவித்தார்.

No comments:

Post a Comment