எவருக்கேனும் கொரோனா கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு, பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் தவறான முன்னுதாரணம் : சாடுகிறது பொது சுகாதார பரிசோதகர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

எவருக்கேனும் கொரோனா கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு, பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் தவறான முன்னுதாரணம் : சாடுகிறது பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

(ஆர்.யசி)

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று நோய் அடையாளம் காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் பரிசோதகர் உபுல் ரோகன தெரிவித்தார்.

பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரிகைகளின் போது அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடந்துகொண்டதாக பாரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நெருக்கமான செயற்பட்டு வருகின்ற பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகனவிடம் இது குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நாம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அளவுக்கு அதிகமான தியாகங்களை செய்துள்ளோம்.

நாம், சுகாதார அதிகாரிகள், பாதுகப்பு படையினர், பொதுமக்கள் என அனைவரும் தியாகங்களை செய்தே இப்போது வரையில் இலங்கையில் மிக மோசமான தாக்கங்கள் எதுவும் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

இதில் சகல மக்களும் தமது மத, சம்ரதாயங்களை மறந்து தமது உறவினர் எவரும் உயிரிழந்தால் ஒரு நாளிலேயே உடலை அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதனை எவரும் எதிர்க்காது ஒரே நாளில் உடல்களை தகனம் செய்ய இணங்கினர். 

குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் மத நடைமுறையை கூட ஏற்றுக்கொள்ளாது உடல்களை எரிக்க வேண்டும் என கூறியிருந்தோம். தந்தை தாய் உயிரிழந்தால் கூட அவர்களின் பிள்ளைகள் பார்வையிட முடியாத கட்டாயம் இருந்தது.

அவ்வாறெல்லாம் மக்கள் செயற்பட்ட வேளையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் ஐந்து மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்களை ஒன்றுதிரட்டி கூட்டம் கூட வைத்து கொவிட்-19 சட்ட திட்டங்களை மீறி, சமூக இடைவெளியை கருத்தில் கொள்ளாது மிகவும் மோசமாக செயற்பட்டுள்ளனர்.

இந்த செயற்பாடு காரணமாக பொதுமக்கள் எமக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க ஆரம்பிதுள்ளனர். இந்த நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த சுகாதார அதிகாரிகளை கூட அமைச்சரின் தரப்பில் பலர் அச்சுறுத்தியுள்ளனர். இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். 

இப்போது நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவல் கட்டுபாட்டில் உள்ளது, ஆனால் இவர்களின் செயற்பாடு காரணமாக எதிர்வரும் தினங்களில் குறித்த பகுதிகளில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தொண்டமான் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சட்ட திட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி:- பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் இதில் கலந்துகொண்டனர், அவர்களிடம் இது குறித்து பேசவில்லையா?

பதில்:- இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சகலருக்கும் கூறுவது ஒன்றுதான், தவறான முன்னுதாராணமாக எவரும் நடந்துகொள்ள வேண்டாம். அரசியல் செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைக்கும், ஆனால் இவ்வாறான வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்பட்டால் அனைவருமே பாதிக்கப்பட்ட வேண்டும். இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி:- மலையகத்தில் தொற்று நோய் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா?

பதில் :- ஆம். பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மலையகத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் சுகாதார பரிசோதகர்களின் சங்க உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment