ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவுக்கு எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டி நீதவான் இன்று (02) இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.
கடந்த மே 23ஆம் திகதி ஊரடங்கு வேளையில் குளியாபிட்டி, பம்மன பிரதேசத்திலிருந்து புதுலுபொத்த நோக்கி கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பன்னலை பிரதேசத்தில் வைத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, ஹெரோயின் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரும் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
25 வயதான, ஷெஹான் மதுஷங்கவிடம் 2.7 கிராம் ஹெரோயின் காணப்பட்டதோடு, அவரது நண்பர் எனத் தெரிவிக்கப்படும் மற்றைய நபரிடம் 2.8 கிராம் ஹெரோயினும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு குளியாபிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு இன்று (02) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த மே 26 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் (SLC) ஷெஹான் மதுஷங்கவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விளையாடுவதற்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவரது வருடாந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்படுவதாகவும், கிரிக்கெட் நிறுவனத்தால் வழங்கப்படும் ஏனைய அனைத்து வசதிகளும் இடைநிறுத்தப்படுவதாகவும், அறிவித்திருந்தது.
இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் வரை மதுஷங்காவை இடைநீக்கம் செய்வதற்கான முடிவு நடைமுறையில் இருக்கும் என்றும் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
25 வயதான ஷெஹான் மதுஷங்க, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது அறிமுக சர்வதேச போட்டியிலேயே ஹெட்ரிக் சாதனை படைத்ததன் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment