கொவிட்-19 காரணமாக சமூகத்திற்குள் ஏற்பட்டிருந்த ஆபத்து முடிவிற்கு வந்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொதுமக்களிற்கு புதிதாக நோய் பரவுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கான சிறந்த தந்திரோபாயத்தை உருவாக்கியுள்ள நாடு இலங்கை என்பதால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் திரும்ப விரும்புகின்றனர். வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து இலங்கை உறுதியாகவுள்ளது என்றார்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும். வருபவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் சோதனையிடப்படுவர், நோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுபவர்கள் விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து செல்ல முன்னர் சோதனை செய்யப்படுவார்கள். சோதனை முடிவுகளை அடிப்படையாக வைத்தே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
நாங்கள் எங்கள் மக்களை அழைத்துவர வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் எங்கள் பிரஜைகள் வெளிநாடுகளில் பாதுகாப்பற்ற சூழலால் இங்கு வரவிரும்புகின்றனர். அவர்கள் தங்கள் தொழில்களையும் இழந்துள்ளனர்.
எனவே நாங்கள் அவர்களிற்கு அதற்கான உதவிகளை வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அவர்களால் உள்ளூர் மக்களிற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இதனை முன்னெடுக்கும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment