20,000 பேர் தொழில் இழப்பு, 30,000 பேர் காத்திருப்பு - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

20,000 பேர் தொழில் இழப்பு, 30,000 பேர் காத்திருப்பு - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதுடன் அவர்கள் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

அவ்வாறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையர்கள் அந்தந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்குமாறு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது பெருமளவிலான நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் மூடப்பட்டுள்ள நிலையில் இலங்கை பணியாளர்கள் தமது சம்பளத்தையும் பெறமுடியாத நிலையில் உள்ளனர்.

மேலும் சில நிறுவனங்களில் சம்பளத்தில் ஒரு பகுதியையே வழங்கி வருகின்றன. அத்துடன் பெருமளவிலானவர்கள் மேலதிக நேர வேலைகளை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு சுமார் 30,000 பேர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்வதால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போகலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். 

இலங்கையர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தலையீடு செய்து நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

அதேவேளை சம்பளத்தை இழந்துள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் அங்குள்ள தூதுவர்கள்ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment