இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறவுள்ள இலங்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறவுள்ள இலங்கை

(ஆர்.யசி)

இலங்கையின் மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய சூரியகல மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலையம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக இந்தியாவிடம் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தேசிய மின் தட்டுப்பாட்டில் இருந்து விடுபடும் நோக்கத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் வகையில் புத்தளத்தில் அனல்மின் நிலையம் ஒன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

300 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறக்கூடிய விதத்தில் இலங்கை மின்சார சபை தலைவருக்கு உடன்படிக்கைகளை தயாரிக்கவும் பணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித மின் உற்பத்தி நிலையங்களும் உருவாக்கப்படாத காரணத்தினால் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவிடம் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியை பெற்று சூரியகல மின் உற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு இதன் மூலமாக மின்சாரத்தை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள் என அனைத்திற்கும் இதற்கான மின்சாரம் வழங்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment